விசிகவுக்கு பானை சின்னம் கிடைக்குமா? – டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அரசியல்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இன்றைக்குள் (மார்ச் 27) முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விசிக போட்டியிடுகிறது. இந்தநிலையில், தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி விசிக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் விசிகவுக்கு இன்னும் பானை சின்னம் ஒதுக்கப்படவில்லை. இந்தநிலையில், விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விடுதலை சிறுத்தைகள் தரப்பில், “பானை சின்னத்தை தற்போது வரை யாரும் கேட்டு விண்ணப்பிக்காததால், அது பொது சின்னமாகவே இருக்கிறது. அதனடிப்படையில் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், “கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை விசிக பூர்த்தி செய்யவில்லை. அதனால் இந்த முறை விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கவில்லை” என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், பானை சின்னம் கேட்டு விசிக தாக்கல் செய்த மனு மீது இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதி சச்சின் தத்தா உத்தரவிட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பானை சின்னம் கேட்டு விசிக மனு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக தேர்தல் அறிக்கை!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0