நீதிபதி முரளிதர் குறித்து விமர்சனம் செய்ததாக துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி மீது டெல்லி பார் அசோசியேஷன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கிலிருந்து அவரை விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், தற்போதைய ஒரிசா உயர்நீதிமன்ற நீதிபதியுமான முரளிதர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து இடைக்கால நிவாரணம் வழங்கி உத்தரவிட்டார்.
இதுகுறித்து துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “கார்த்தி சிதம்பரத்தின் வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் பா.சிதம்பரத்தின் ஜூனியர் வழக்கறிஞர் என்பது உண்மையா?” என்று விமர்சித்திருந்தார்.
இதனை தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் குருமூர்த்தி மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது கடந்த 5 வருடங்களாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் நீதிபதி சித்தார்த் மிருதுல், கவுரங்காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி முரளிதர் குறித்து கருத்து பதிவிட்டதற்கு குருமூர்த்தி மன்னிப்பு கேட்டு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொண்டதால் குற்றவியல் அவமதிப்பு வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
செல்வம்
தென்காசி மறு வாக்கு எண்ணிக்கை : மீண்டும் நிறுத்தம்!
விலைவாசி உயர்வு: போராட்டத்தை அறிவித்த அதிமுக