டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து, அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தெரிவித்துள்ளனர்.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று இரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஏப்ரல் 1 ஆம் தேதி வரை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.
அதன்பிறகு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில் தன்னை அமலாக்கத்துறை கைது செய்தது தவறு என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
தேர்தல் நேரத்தில் கைது செய்தது குறித்த வாதம்
2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டி சமமாக இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு பண முறைகேடுகள் தடுப்பு சட்டத்தினை (PMLA) தவறாக பயன்படுத்தி தன்னை கைது செய்திருக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாதிட்டார்.
நீதிபதி ஸ்வரண காந்த ஷர்மா அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வதற்கு அமலாக்கத்துறை போதுமான ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதாகவும், இந்த வழக்கில் அப்ரூவராக மாறியவர்களின் வாக்குமூலங்களும் இருப்பதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரே கோவா தேர்தலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பணம் கொடுத்ததை குறிப்பிட்டிருப்பதாகவும் தெரிவித்து அமலாக்கத்துறை கைது சரியே என்று தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் கைது செய்ததைப் பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிட்டபோது, ”அவர் பண முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்றம் அவரின் கைது மற்றும் சிறையைக் குறித்து சட்டத்தின் பார்வையில் தான் ஆராய முடியும். தேர்தல் நேரம் என்றெல்லாம் பார்க்க முடியாது” என்று நீதிபதி அந்த வாதத்தினை ஏற்க மறுத்துள்ளார்.
அப்ரூவர்களாக மாறியவர்கள் யார்?
கெஜ்ரிவால் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அப்ரூவராக மாறியவர்களின் வாக்குமூலத்தில் உண்மைத்தன்மை இல்லை என்று வாதிட்டார். ”ராகவ் மகுந்தா, சரத் ரெட்டி, மகுந்தா ரெட்டி ஆகியோர் அமலாக்கத்துறையால் கட்டாயப்படுத்தப்பட்டு அப்ரூவர்களாக மாறியுள்ளனர். சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவும், தேர்தலில் போட்டியிடுவதற்கு தங்களுக்கு சீட்டு கிடைக்கும் என்பதற்காகவும் தான் அப்படிப்பட்ட வாக்குமூலங்களை அவர்கள் அளித்தனர்” என்று தெரிவித்தார் அபிஷேக் மனு சிங்வி.
கெஜ்ரிவால் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தினால் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் 2022 நவம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்ட, அரோபிந்தோ ஃபார்மா நிறுவனத்தின் இயக்குநரான சரத் சந்திரா ரெட்டி, அவரை கைது செய்த 5 நாட்களில் பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் 5 கோடி கொடுத்திருக்கிறார் என்ற தகவல் அதில் தெரியவந்தது. 2023 ஜூன் மாதம் அவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அப்ரூவராக மாறினார். அதன்பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் 25 கோடி ரூபாயை அவர் பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுத்திருக்கிறார்.
இந்த வழக்கில் மற்றொரு அப்ரூவரான ராகவ் மகுந்தாவின் தந்தை மகுந்தா ரெட்டிக்கு ஆந்திராவில் பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இவற்றை மையமாக வைத்தே இந்த அப்ரூவர்களின் வாக்குமூலம் உள்நோக்கம் கொண்டது என்று வாதிட்டது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு. ஆனால் இந்த வாதத்தினை ஏற்க மறுத்துவிட்டார் நீதிபதி.
டெல்லி முதல்வரை வீடியோ கான்ஃபிரன்சிங் மூலமே விசாரித்திருக்க முடியும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு சொன்னதற்கு, விசாரணை எப்படி நடக்க வேண்டும் என்பதை குற்றம்சாட்டப்பட்டவர் முடிவு செய்ய முடியாது. முதல்வராக இருந்தாலும் கூட யாருக்கும் இப்படிப்பட்ட சிறப்பு சலுகைகள் வழங்க முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கட்சியையே குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை
”டெல்லி மதுபானக் கொள்கை ஊழலில் பெரிதும் பலனடைந்தது ஆம் ஆத்மி கட்சியே. இந்த குற்றம் அரவிந்த் கெஜ்ரிவால் மூலமாக நிகழ்த்தப்பட்டுள்ளது” என்று ஆம் ஆத்மி கட்சியையே மொத்தமாக குற்றம் சாட்டும் வகையில் அமலாக்கத்துறையினர் வாதிட்டனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மனிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரில் சஞ்சய் சிங்கிற்கு மட்டும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. மனிஷ் சிசோடியா இன்னும் சிறையில் தான் இருக்கிறார்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு என்பது என்ன?
அடிப்படையில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு என்பது என்னவென்றால் 2021 ஆம் ஆண்டு டெல்லி அரசாங்கத்தின் சார்பில் புதிய மதுபானக் கொள்கை ஒன்றை உருவாக்கினர். அதில் மதுபானங்கள் விற்பனையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் இந்த கொள்கை 2022 ஆம் ஆண்டு டெல்லி அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்டது. இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட போது, குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக ஆம் ஆத்மி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களால் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் இந்த ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் தான் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பிணை கோருவது தொடர்பான வழக்கல்ல. அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததே தவறு என்று கைதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கு. கெஜ்ரிவாலை கைது செய்தது சட்டப்படி தான் நிகழ்ந்திருக்கிறது என்று டெல்லி உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டதால், இனி அவருக்கான பிணை கோரும் வழக்கு தனியே தொடரும். ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அவருடைய நீதிமன்றக் காவல் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட பிறகும் தன் மீது எந்த தவறும் இல்லை, அதனால் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடியாது என்று சொல்லி சிறையிலிருந்தே முதல்வராக அலுவல் பணிகளை கவனித்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொள்ளாச்சி கோழிப்பண்ணை நிறுவனத்தில் ரெய்டு : பின்னணி என்ன?
G.O.A.T : ஷூட்டிங்கில் ஜாலியாக சுற்றும் விஜய்
பாஜக இலக்கும்… மாம்பழம் விலையும் : வைரலாகும் முன்னாள் தேர்தல் ஆணையரின் பதிவு!