வைஃபை ஆன் செய்ததும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான செய்திகள் ஸ்க்ரீன் ஷாட்டுகளாக வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே திடீரென ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்து விடவே கடந்த மாத இறுதியில் எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் ஒரு முறையீட்டை வைத்தார்.
அதிமுகவின் பொதுக்குழுவில், தான் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

எனவே எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி.
ஜனவரி 30 ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது.
இந்த நிலையில்தான் பிப்ரவரி 2 ஆம் தேதி, பிற்பகல் இந்த வழக்கு தொடர்பான தனது பதிலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம். இதுதான் இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘ஜூலை 11ஆம் தேதி தொடர்பான பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் அது தொடர்பாக வழக்குகள் உள்ளதால், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை.
எனவே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக உரிமை கோரும் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை சம்பந்தப்பட்ட தேர்தலை நடத்தும் அதிகாரி முடிவு செய்வார்’ என்று தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
அதாவது தேர்தல் ஆணையத்தின் பதிவுகளை பொறுத்தவரை அதிமுகவில் இன்னும் இரட்டைத் தலைமையே நீடிக்கிறது என்பதுதான் இந்த பதில் மூலம் உணர்த்தப்படும் செய்தியாக இருக்கிறது. அப்படி என்றால் எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கையெழுத்திட்டால் தான் இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு கிடைக்கும். ஆனால் இப்போது இரண்டு பேருமே தனித்தனி வேட்பாளர்களை அறிவித்து இருப்பதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி ஈரோடு நகரத்தில் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிமனையை திறந்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதில் மோடி, அமித்ஷா படங்களை தவிர்த்து விட்டு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று கூட்டணியின் பெயரையும் மாற்றினார்கள். இது தமிழக பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தது.
இது குறித்து உரிய பதில் அளிக்கப்படும் என அண்ணாமலை அறிவித்த நிலையில் அன்று மாலையே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயர் தேர்தல் பணிமனையில் எழுதப்பட்டது. ஆனால், அன்று இரவு அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி வேட்பாளர் என்று மீண்டும் மாற்றப்பட்டது.
இதிலிருந்து பாஜக தனக்கு நெருக்கடி கொடுத்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி என்பதில் மாற்றமில்லை என்ற செய்தியை எடப்பாடி உணர்த்தினார். மேலும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக திமுகவுக்கு இணையான தேர்தல் பணிகளை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி தரப்பினர் முகாமிட்டு செய்து வருகின்றனர்.
இரட்டை இலையை முடக்கினாலும் பரவாயில்லை பன்னீரோடு எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதில் எடப்பாடி உறுதியாக இருப்பதாக அவரது தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக இருந்தபோது சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தியும் அதை நேருக்கு நேராக மறுத்தவர் எடப்பாடி. இப்படிப்பட்ட சூழலில் கட்சி அளவில் மிகச் சிறிய அளவே பலம் கொண்ட பன்னீர்செல்வத்தை தனக்கு இணையான தலைவராக கருதி அவரோடு சமரசம் செய்து கொள்ள இப்போதும் எடப்பாடி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்த நிலையில்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். பிப்ரவரி 2 காலை அவர் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து தமிழ்நாடு அரசியல் நிலவரம் தொடர்பாக விளக்கினார்.
ஒருங்கிணைந்த அதிமுகவை வைத்துக்கொண்டு இரட்டை இலை சின்னத்தோடு கூட்டணியாக தேர்தலை சந்தித்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக போட்டு வைத்த கணக்கு. ஆனால் ஈரோடு இடைத் தேர்தலுக்கே அந்த கணக்கை நிராகரிக்கும் எடப்பாடி பொது தேர்தலுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று கருதுகிறது பாஜக தலைமை.

அதே நேரம் ஓ. பன்னீர்செல்வம் பாஜக போட்டியிட்டால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து, தான் வாபஸ் பெற்று கொள்வதாகவும் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒருங்கிணைந்த சக்தியாக வருவதையே தொண்டர்களும் பாஜகவும் விரும்புவதாகவும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்.
இந்த நிலையில் எடப்பாடி தரப்பின் செயல்பாடுகளுக்கு கடந்த சில தினங்களாக நிதானமாகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் பதில் அளித்து வந்த அண்ணாமலை டெல்லி சென்று நட்டாவை சந்தித்த பிறகு தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் தான் எடப்பாடி பழனிச்சாமியை இன்னும் இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த அதிமுக என்ற பாஜகவின் திட்டத்திற்கு ஒத்து வராத காரணத்தால் எடப்பாடிக்கு தேர்தல் ஆணையம் மூலமாக பாரதிய ஜனதா கொடுக்கும் நெருக்கடி தான் இது. ஆனால் இதை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக கூறுகிறது எடப்பாடி தரப்பு.
1989 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது ஈரோடு மாவட்டத்தில் கணிசமான இடங்களில் ஜெயலலிதாவின் சேவல் சின்னம் வெற்றி பெற்றது. எனவே இரட்டை இலை இல்லை என்றாலும் பரவாயில்லை எங்களுக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் வெல்வோம் என்ற கணக்கோடு தான் ஒரு மெகா தேர்தல் பணி குழுவை அமைத்து துல்லியமாக தேர்தல் பணியாற்றி வருகிறார் எடப்பாடி.
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலைப் பொறுத்து பிப்ரவரி 3ஆம் தேதி இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கும். இந்த நிலையில் இரட்டை இலைக்காக காத்திருக்காமல் தான் என்ன சின்னத்தில் போட்டியிடுவது என்ற ஆலோசனையையும் எடப்பாடி தொடங்கி விட்டதாகவே தெரிகிறது.
ஆனால் தற்போதைய அதிமுகவில் கொங்கு பகுதியை சேர்ந்தவர்களை தவிர பிற பகுதியை சேர்ந்தவர்கள் இதற்கு ஒப்புக் கொள்வார்களா அவர்கள் பாஜகவோடும் பன்னீர்செல்வத்தோடும் சமரசமாக போக சொல்லி எடப்பாடியை வற்புறுத்துவார்களா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
தளபதி 67 டைட்டில் நாளை அறிவிப்பு!
திமுக தொண்டரின் வீட்டில் 16 அடி உயர கலைஞரின் பேனா!
அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையத்திற்குக் காந்தி பெயர்: மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!