ஹரீஷ் காரே Delhi Election results 2025
தில்லி மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்குக் கிடைத்த அங்கீகாரம் அல்ல, மாறாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஏமாற்று அரசியலின் பரிசோதனையை நிராகரிப்பதாகும் என்று காங்கிரஸ் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது. இது ஓரளவு உண்மையாகவே இருக்கலாம். Delhi Election results 2025
எனினும் இந்த முடிவுகள் பாஜகவுக்கு நிச்சயமாக உற்சாகத்தை அளிக்கும். முகஸ்துதிக் கலைஞர்கள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டார்கள். மோடியின் கவர்ச்சி அப்படியே உள்ளது, அமித் ஷா தான் சாணக்கியன் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார், அரசியல் களத்தில் பாஜகவின் ஆதிக்கம் தொடர்கிறது என்றெல்லாம் அரசுக்கு ஜால்ரா அடிக்கும் இதழியலாளர்களும் அரசியல் கருத்தாளர்களும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இவற்றிலும் சில உண்மைகள் இருக்கலாம்.
ஆம் ஆத்மி கட்சி தில்லி சுல்தானகத்தின் அரியணையை பாஜகவிடம் இழந்துள்ளது என்பதும் உண்மைதான். ஆனால் அதன் ஆதரவுத் தளம் ஆட்டம்கண்டுவிடவில்லை. பதிவான வாக்குகளில் 42% என்பது சிறிய அளவு அல்ல. கெஜ்ரிவாலுக்கு ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரருக்கு இருக்கும் தாக்குப்பிடிக்கும் திறனும் தன்னம்பிக்கையும் உள்ளதா என்று பார்க்க வேண்டும்; இந்தத் தேர்தலில் பாஜக தனது வழக்கமான பல்லவியை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது குறித்து அவரும் அவரது கட்சியினரும் திருப்தி அடையலாம்.
குறைந்தது மூன்று அம்சங்களில் பாஜகவிடம் மாற்றம் ஏற்படுத்தியதற்காக ஆம் ஆத்மி கட்சி பெருமை கொள்ளலாம். Delhi Election results 2025
மதவாதத்திற்கு இடமில்லை Delhi Election results 2025
முதலாவதாக, பாஜக தனது இந்து-முஸ்லிம் பிளவுப் பிரச்சாரத்தை ஒதுக்கிவைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. தில்லி பிரச்சாரம் தொடங்கியபோது, பாஜக டிக்கெட் ஆர்வலர்கள் “ஏக் ஹே டு சேஃப் ஹே” (ஒற்றுமையாக நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்) என்ற முழக்கத்தை எழுப்பினார்கள். மகாராஷ்டிரத் தேர்தலின்போது இந்துக்களை அணிதிரட்ட ஆர்எஸ்எஸ் / இந்துத்துவத் தீவிரப் போக்காளர்கள் முதலில் உருவாக்கிப் பயன்படுத்திய முழக்கம் அது. Delhi Election results 2025
மத விவகாரங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய கபில் மிஸ்ராவுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டபோதிலும், பாஜகவின் சொல்லாட்சிகளும் வாதங்களும் மதவாதத்தை மையமிட்டவையாக அமையவில்லை. ஆம் ஆத்மி அரசாங்கத்தின் தவறான செயல்களின் மீதே கவனம் செலுத்தின. “கோலி மரோ சாலோ கோ” (துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்கள்) என்று அனுராக் தாக்கூர் கூச்சலிடவில்லை. மோடியும் ஷாவும் பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுக்கும் தங்கள் அரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டனர்.
பாஜக ஒன்றும் மாறிவிடவில்லை. இந்த மாற்றங்கள் எல்லாமே தேர்தலுக்கான தந்திரங்கள்தான் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் பாஜகவின் போக்கைக் கட்டுப்படுத்தியதுதான் கெஜ்ரிவாலின் சாதனை. நடுத்தர வர்க்கத்தினரை ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து விலக்க வேண்டுமென்றால், தலைநகரில் உள்ள இந்துத்துவ வெறியர்களைக் கட்டுக்குள் வைத்தாக வேண்டும் என்பதை பாஜக உணர்ந்தது.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்துத்துவ அரசியலை உறுதியாக முன்னெடுக்கிறார். தில்லியிலோ மோடியின் குழுவினர் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். தில்லி நடுத்தர வர்க்கத்தினர் பணபலமும் அதிகார வலிமையும் கொண்ட மோடி-ஷாவின் அரசியல், கெஜ்ரிவாலின் அதீத சுயநல அரசியல் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். ஆனால் தில்லி வாக்காளர்களுக்கு வன்முறையையும் பெரும் இடையூறுகளையும் மட்டுமே ஏற்படுத்தும் வகுப்புவாதத்தின் மீது எந்த விருப்பமும் இல்லை.

புத்துயிர் பெற்ற “இலவசக் கலாச்சாரம்”
இரண்டாவதாக, பிரதமர் மோடி ஒரு காலத்தில் ‘ரெவ்டி’ கலாச்சாரம் (இலவசங்களை அளிக்கும் கலாச்சாரம்) என்று ஆம் ஆத்மி அரசைக் கண்டித்ததுண்டு. இன்று பாஜகவே அத்தகைய கலாச்சாரத்தைக் கைக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக கெஜ்ரிவாலும் அவரது சகாக்களும் பெருமைப்படலாம். ஆம் ஆத்மி அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் மக்கள் சார்புத் திட்டங்களும் சலுகைகளும் தொடரும் என்று பாஜக தலைமை வாக்குறுதி அளிக்க வேண்டியிருந்தது. அது மட்டுமல்லாமல், பாஜகவும் பல இலவசங்களை அறிவித்தது.
பாஜக அளித்த வசீகரமான வாக்குறுதிகளின் பட்டியல் இது: Delhi Election results 2025
• பெண்களுக்கு மாதம் ரூ.2,500;
• ரூ.500 விலையில் எல்பிஜி சிலிண்டர்கள்; “ஹோலி, தீபாவளி பண்டிகைகளுக்கு சிலிண்டர்கள் இலவசம்”;
• எல்கேஜி முதல் பட்டப்படிப்புவரை இலவசக் கல்வி;
• ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்ஷா ஓட்டுநர்கள், வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வேலை செய்பவர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு;
• அடல் கேன்டீன்களில் ரூ.5 விலையில் சத்தான உணவு (அம்மா உணவகம்போல);
இதுபோல மேலும் பல வாக்குறுதிகளை பாஜக அளித்தது. Delhi Election results 2025
இப்போது பல மத்திய அரசுக்குச் சார்பான பொருளாதார வல்லுநர்கள் பாஜகவின் இலவசங்கள் மக்கள் நலம் சார்ந்த நடவடிக்கைகள் என்று நமக்குச் சொல்வார்கள். மோடியின் உத்தரவாதம் என்ற பெயரால் பாஜக இந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளது. வளங்களைப் பெருமளவில் மறுபகிர்வு செய்யும் திட்டம் இப்போது தீட்டப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கும் ஆம் ஆத்மி தலைமையும் தொண்டர்களும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு Delhi Election results 2025
மூன்றாவதாக, தில்லி சட்டமன்றத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டம் பாஜகவை அதன் பொருளாதார முன்னுரிமைகளை மாற்றியமைக்கக் கட்டாயப்படுத்தியுள்ளது. ஏழைகள் மீது அதிக கவனம் செலுத்தியதால் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு குறைந்துள்ளது என்று பரவலாக நிலவும் கருத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரிச் சலுகைகளை அறிவித்தது. Delhi Election results 2025

தில்லியின் மக்கள்தொகையில் சுமார் 67% பேரை “நடுத்தர வர்க்கம்” என்று வகைப்படுத்தலாம். தில்லியின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக, மோடி ஆட்சி ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வருவாயை இழந்துள்ளது. இதனால் பலன் பெறும் நடுத்தர வர்க்கத்தினர் அதிக நுகர்வில் ஈடுபட்டு அதனால் பணப்புழக்கம் அதிகரித்துப் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்படுமா என்பது எதிர்காலத்தில்தான் தெரியவரும். ஆனால் தற்போதைக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் என்ற ஆபத்தான அரசியல் நபரை முடக்கிய திருப்தியை மோடி ஆட்சி பெறலாம்.
கெஜ்ரிவால் புதிய அரசியலின் சின்னமல்ல என்று உணர்ந்ததாலேயே நடுத்தர வர்க்கத்தினர் ஆம் ஆத்மி கட்சியைக் கைவிட்டார்கள். அவர்கள் ஆம் ஆத்மியைக் கைவிட்டார்களே தவிரத் தங்கள் விழுமியங்களையும் நல்லாட்சிக்கான ஏக்கத்தையும் கைவிடவில்லை. அந்த ஏக்கம் மோடியின் தலைவலியாக மாறும் என்பதை பாஜகவினரும் அதன் சித்தாந்த வழிகாட்டிகளும் மனதில் கொள்வது விவேகமான செயலாக இருக்கும்.
நடுத்தர வர்க்கத்தினர், மோடியின் ஆளுமை பிம்பத்தினாலும் பாஜகவின் கலாச்சார தேசியவாதத்தாலும் திசைதிருப்பப்படுகிறார்கள். இரண்டும் மிகைப்படுத்தப்பட்டவை. இவை அளிக்கும் பலன்களும் குறைந்துவருகின்றன. மௌனி அமாவாசை அன்று கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி எத்தனை பக்தர்கள் இறந்தார்கள் என்பதை நமக்குத் தெரிவிக்க விருப்பமில்லாத இந்து தேசியவாத ஆட்சியின் பயன் என்ன? நடுத்தர வர்க்கத்தினர் இதுபோன்ற நுண்ணுணர்வற்ற மௌனங்களையும் நிர்வாக ஆணவத்தையும் விரும்புவதில்லை. Delhi Election results 2025
பிரதமர் விஸ்வகுருவாகத் தன்னைக் காட்டிக்கொள்ளலாம். ஆனால் அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கால்களிலும் கைகளிலும் விலங்கிடப்பட்டுத் திருப்பி அனுப்பப்படும் அவமானகரமான காட்சிகளைப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர் அதையெல்லாம் நம்புவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்திருந்தாலும், தேசிய அரசியலில் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கியத்துவத்தை மீட்டெடுத்திருக்கிறார். அது மட்டுமல்ல; அவரும் அவரது கட்சியும் மோடி ஆட்சியை நலப்பணிகளில் ஈடுபட வைத்துள்ளார்கள். தில்லியில் நடைபெற்ற போர் பாஜக தலைமைக்கு வகுப்புவாத அரசியலின் வரம்புகளை உணர்த்தியுள்ளது. தில்லியில் விழுந்த வாக்குகள் தில்லிக்கு அப்பாலும் விளைவுகளை ஏற்படுத்தும். அனைத்து அரசியல் அமைப்புகளும் தங்கள் முன்னுரிமைகளையும் அரசியலையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
நன்றி: தி வயர் இணைய இதழ்
தமிழில்: தேவா
ஹரீஷ் காரே

ஹரிஷ் கரே ஜூன் 2009 முதல் ஜனவரி 2012 வரை பிரதமர் அலுவலகத்தின் ஊடக ஆலோசகராக பணியாற்றினார். புது தில்லியில் உள்ள தி ஹிந்து நாளிதழில் குடியுரிமை ஆசிரியராகவும், பணியகத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்
தமிழில்: தேவா