டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி, ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இடையே கடுமையான வார்த்தை போர் வெடித்துள்ளது.
ராகுல் காந்தி, டெல்லி பவனா தொகுதில் நேற்று (ஜனவரி 29) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, “சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமல் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார். Delhi election rahul kejriwal
2020-ஆம் ஆண்டு டெல்லியில் வன்முறைக் கலவரம் வெடித்தபோது அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. டெல்லியில் ஊழல் மலிந்த ஓர் ஆட்சியை ஆம் ஆத்மி நடத்திக்கொண்டிருக்கிறது.
மோடியை போல கெஜ்ரிவாலும் பொய் சொல்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, யமுனை நதியில் குளிப்பதாகவும், அதன் நீரைக் குடிப்பதாகவும் கெஜ்ரிவால் கூறினார். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் அவர் இன்னும் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
டெல்லி மக்கள் மட்டும் அழுக்கு தண்ணீரைக் குடிக்க வேண்டும், ஆனால் கெஜ்ரிவால் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசதியாக இருக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.
பால்டி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது”காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து உங்கள் வாக்கை ஏன் வீணடிக்கிறீர்கள். அவர்கள் இந்த தேர்தலில் வெற்றிப் பெறப்போவதில்லை. வாக்குகளை மட்டுமே பிரிப்பார்கள்.
காங்கிரஸும் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று மறைமுக டீலிங் செய்திருக்கிறார்கள். ஆனால், ஆம் ஆத்மி கட்சி உங்களுக்காக பணியாற்றிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸோ அல்லது பாஜகவோ உங்களுக்கு உதவ மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.