நடுங்கும் நிலம் – கனவு கண்ட திருமா

அரசியல் சிறப்புக் கட்டுரை

ரவிக்குமார்

நேற்று ( 21.03.2023) டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு சுமார் 10.30 மணியிருக்கும் நான் படுக்கையில் அமர்ந்து மொபைலில் டைப் செய்து கொண்டிருந்தேன். அப்போது கட்டில் கிடுகிடுவென நடுங்குவதை உணர்ந்தேன்.

நேற்று மாலையிலிருந்தே கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகித் தான் அப்படித் தோன்றுகிறதோ என்ற சந்தேகத்தில் உடனடியாக ஸ்மார்ட் வாட்சை எடுத்துக் கையில் அணிந்து எனது இதயத்துடிப்பை பரிசோதித்தேன். அது பயப்படும்படியாக இல்லை. அந்த நொடியிலேயே நான் உணர்ந்தது நிலநடுக்கம் தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.

delhi earthquake

டேபிள் மேல் கண்ணாடி டம்ளரில் பாதி குடித்துவிட்டு வைத்த தண்ணீர் இருந்தது. அதை உற்றுப் பார்த்தேன். சிறு சலனம் தெரிவது போல் பட்டது. கால்களைத் தரையில் ஊன்றிப் பார்த்தேன். தலை சுற்றுவது போல் இருந்தது. மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொண்டேன். கட்டில் திரும்பவும் நடுங்கியது. இது நிலநடுக்கம் தான் என்று மனம் உறுதிப்படுத்தியது.

நிலநடுக்கம் குறித்த செய்திகள் எதுவும் வெளியாகியிருக்கிறதா என்று ட்விட்டரில் தேடிப் பார்த்தேன். ஒன்றும் இல்லை. நான் நிலநடுக்கத்தை உணர்ந்த தகவலை ட்விட்டரில் பதிவு செய்தேன். அதை நான் வைத்திருக்கும் ஊடக நண்பர்கள் குழுவில் பகிர்ந்தேன்.

அதன் பின் யுஎஸ்ஜிஎஸ் தளத்தைப் போய் பார்த்தபோது நிலநடுக்கம் ஏற்பட்ட தகவல் பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு பக்கத்தில் ஜூர்ம் என்ற இடத்தில் பூமிக்குக் கீழே 6.5 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாக அது தெரிவித்தது. பூமிக்கு 187.6 கிலோமீட்டர் தொலைவுக்குக் கீழே பூகம்பம் ஏற்பட்டிருந்தது.

“இமயமலைப் பகுதியில் இந்தியா மற்றும் யூரேசியா கண்டத் தகடுகளின் மோதலால் நிலநடுக்கம் உண்டாகிறது. அந்தத் தகடுகள் ஆண்டுக்கு 40-50 மிமீ/என்ற அளவில் ஒன்றையொன்று நசுக்குகின்றன. யூரேசியா கண்டத் தகட்டின் கீழ் இந்திய தகட்டின் வடக்கு நோக்கிய நகர்வு பல பூகம்பங்களை உருவாக்குகிறது. அதன் விளைவாக இந்தப் பகுதியானது பூமியில் அதிகம் நில அதிர்வு நடக்கும் அபாயகரமான பகுதிகளில் ஒன்றாக உள்ளது” என யுஎஸ்ஜிஎஸ் தளம் கூறியது.

delhi earthquake

நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வேறு சில நண்பர்களோடு கடைவீதிக்குப் போயிருந்தார். அதன் பின்னர் தொலைபேசியில் தயாளன் அவருக்குத் தகவலைச் சொன்னார். அதைக் கேட்டு விட்டு உடனடியாக அவர் வீடு திரும்பினார். வீடு திரும்பியதும் அவரிடம் எனது அனுபவத்தைச் சொன்னேன்.

delhi earthquake

அதற்குள் தொலைக்காட்சி சேனல்களில் நிலநடுக்கம் குறித்த செய்திகள் வரிசையாக ஒளிபரப்பாகத் தொடங்கி இருந்தன. அதைப் பார்த்தபடியே அவர் சொன்னார்: “ நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். நான் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நிலம் பிளக்கிறது. எல்லாம் அந்தப் பிளவுக்குள் சரிகின்றன. நான் தாவி ஒரு சுவரைப் பிடித்துக் கொள்கிறேன். அப்படியே விழித்துக் கொண்டு விட்டேன் “ என்று கூறினார்.

‘ நடப்பதை முன் உணரும் ஆற்றல் ( premonition) சிலருக்கு உண்டு என்று சொல்வார்கள் ‘ என்று நான் அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது காப்ரியல் கார்ஸியா மார்க்யெஸ் எழுதிய ஒரு சிறுகதை எனக்கு நினைவுக்கு வந்தது. ‘ஸ்ட்ரேஞ் பில்கிரீம்ஸ்’ தொகுப்பில் அது இடம்பெற்றிருக்கும். ஐ செல் மை ட்ரீம்ஸ் ( I sell my dreams ) என்பதுதான் அந்தக் கதையின் தலைப்பு. அந்தக் கதையில் மார்க்யெஸ், பாப்லோ நெருடா, நெருடாவின் மனைவி எல்லோருமே வருவார்கள்.

மார்க்யெஸ் ஒரு பெண்ணை சந்திப்பார். அவளுடைய தொழில்- கனவுகளை விற்பது. கனவுகள் கண்டு அதற்கு அர்த்தம் சொல்வது- அதுதான் அவளது வேலை. ஒரு முறை மார்க்யெஸ் அந்தப் பெண்ணை நெருடாவுக்கு அறிமுகம் செய்வார். அவரது அபூர்வமான ஆற்றலைப் பற்றி மார்க்யெஸ் சொல்வார். அதை நம்பாமல் கேட்டுக் கொண்டிருப்பார் நெருடா.

மார்க்யெஸை சந்தித்த பிறகு நெருடா தூங்குவதற்காக செல்வார். தூங்கி எழுந்து வந்து தூக்கத்தில் தனக்கு ஏற்பட்ட புதிரான அனுபவம் ஒன்றை மார்க்யெஸிடம் விவரிப்பார். கனவுகள் விற்கும் அந்தப் பெண்ணைத் தன்னுடைய கனவில் பார்த்ததாகவும், அப்போது அவள் தன்னைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்ததாகவும் நெருடா தெரிவிப்பார்.

நெருடாவை வழியனுப்பி வைத்துவிட்டு தான் ஊருக்குப் போவதை சொல்வதற்காக அந்தப் பெண்ணை மார்க்யெஸ் பார்க்கப் போவார். அப்போது அவள் நெருடா பற்றி , தான் கனவு கண்டதாகவும், அந்தக் கனவில் நெருடா தன்னைப் பற்றி கனவு கண்டு கொண்டு இருந்ததாகவும் சொல்வாள்.

delhi earthquake

இந்தக் கதையை நான் தலைவரிடம் சொன்னேன். அதன் பிறகு எங்களது உரையாடல் இப்படியான புதிரான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதாக மாறிவிட்டது. அது பேய் பற்றிய கதைகள், கிராமப்புறங்களில் முனி நடமாடுவது பற்றிய கதைகள், சிறுவயதில் கேட்ட கதைகள் – எனப் பலவற்றையும் பரிமாறிக் கொண்டோம். நண்பர் தயாளன் அத்தகைய கதைகளைத் தானும் கேட்டிருப்பதாகச் சொன்னார். “ கிராமங்களில் இருந்த முனிகளெல்லாம் கிராமத்துக்கு மின்சாரம் வந்ததற்குப் பிறகு காணாமல் போய்விட்டன “ என்றேன் நான்.

மிக மிக உறுதியானவை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கட்டடங்களெல்லாம் நிலநடுக்கம் ஏற்பட்டால் , அடுக்கி வைத்த சீட்டுகள் சரிவதுபோல சரிகின்றன. இயற்கையின் வலிமைக்கு முன்னால் மனிதன் ஒரு தூசு என்பதை இந்த நிலநடுக்கமும் உணர்த்திவிட்டது. உண்மை இப்படியிருக்கும்போது தங்களது பதவி நாற்காலி ஆட்டமே காணாது என பிரதமரும் அவரது கூட்டாளிகளும் நம்பிக் கொண்டிருக்கிறார்களே அதை நினைத்துப் பார்த்தேன். ‘ இலம்’ என்று நினைப்பவர்களை மட்டுமல்ல, எல்லாம் இருக்கிறது என்பவர்களைக் கண்டாலும்கூட ‘ நிலம் என்னும் நல்லாள் நகும்’

வனத் துறை பள்ளிகளின் அவலமும், நேரடியாக கல்வித் துறையின் கீழ் வருவதன் பயன்களும்!

உக்ரைனில் ரஷ்ய அதிபரைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர்!  

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *