பணமோசடி வழக்கு: சுகாதாரத் துறை அமைச்சர் ஜாமீன் மனு தள்ளுபடி!

Published On:

| By Prakash

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவ்வரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின்.

இவரும் இவரது குடும்பத்தினரும் கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது.

இந்த நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின், கடந்த மே மாதம் அமலாக்கத் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து, பணமோசடி வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சத்யேந்திர ஜெயின், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விகாஸ் துல் முன் இன்று (நவம்பர் 17) விசாரணைக்கு வந்தபோது, சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவரின் ஜாமீன் கோரும் மனுக்கள் மீதான உத்தரவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெ.பிரகாஷ்

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

அரசுப் பணி இடஒதுக்கீடு: புதுச்சேரியில் பாமகவினர் போராட்டம்!