டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது.
டெல்லியில் உள்ள மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இதில், 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆம் ஆத்மி மற்றும் பாஜக தலா 250 வார்டுகளிலும் காங்கிரஸ் 247 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 7) நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தது.
மேலும், கடந்த தேர்தலில் டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்றியிருந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.
பாஜகவுக்கு இரண்டாவது இடமும், காங்கிரசுக்கு குறைந்த அளவிலும் இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டது.
அதன்படி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கைக்காக, மொத்தம் 42 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 68 கண்காணிப்பாளர்கள் இந்த பணியை கண்காணித்து வருகின்றனர்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு வசதியாக வாக்கு எண்ணும் மையங்களில் பெரிய அளவிலான எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் காலை 10மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 125வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 119வார்டுகளிலும், காங்கிரஸ் 5வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது.
ஜெ.பிரகாஷ்
அதிகாலையில் 6 பேர் உயிரை பறித்த விபத்து!
டிசம்பர் 9: திரை – ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ?