டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று மதியம் 1.30 மணி வரை ஆம் ஆத்மி 121 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 7) நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தது. அதன்படி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவருகிறது. அதன்படி, காலை 11.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 52 இடங்களிலும், பாஜக 47 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.
அதன்பிறகு 11.55 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 75 இடங்களிலும், பாஜக 54 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மதியம் 1.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 121 இடங்களிலும், பாஜக 96 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த முறை பாஜக டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
எஸ்.சி. மொபைல் ஆப் 2.0.: உச்ச நீதிமன்றத்தின் புதிய செயலி!
புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வர் திறப்பு!