டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4-ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடந்த ஆண்டு நவம்பர் 2, டிசம்பர் 21 மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 3 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி அமைச்சர்களே தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி பதிவிட்டிருந்தனர். இதனால் டெல்லி அரசியலில் பரபரப்பு நிலவியது.
இந்தநிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்காவது முறையாக ஜனவரி 18-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக, ஜனவரி 18 முதல் 20 வரை நாடாளுமன்ற தேர்தல் விவகாரம் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவா செல்ல உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் ஜனவரி 18-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொங்கல் பண்டிகை: பயணிகளுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்!
பெரியார், அம்பேத்கர் விருதுகள்: இன்று வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்