மகளிர் ஆணையத் தலைவி பாலியல் சீண்டலுக்கு உள்ளான நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் கார் மோதி இளம்பெண் ஒருவர் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியை பலமாக எழுப்பியது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் காரில் சென்ற இளைஞர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு இன்று ஸ்வாதி மாலிவால் அளித்துள்ள பேட்டியில், “நேற்றிரவு சுமார் 11.30 மணியளவில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக் டெல்லி எய்ம்ஸ் அருகில் உள்ள நடைபாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த கார் ஓட்டுநர் என்னை காரினுள் வரும்படி இழுத்தார்.
ஆனால் நான் மறுத்ததோடு, அவரை பிடிக்கவும் முயன்றேன். இதில் சுதாரித்துக்கொண்ட அவர், என் கையை பக்கவாட்டு கார் கண்ணாடியில் மாட்டும்படி செய்துவிட்டு சுமார் 15 மீட்டர் தூரம் இழுத்து சென்றார்.” என்றார்.
சம்பவத்தின் போது தூரத்தில் நின்று இதனை கவனித்து கொண்டிருந்த மாலிவாலின் குழுவினர், காரில் வேகமாக சென்றவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் 47 வயதுடைய அந்த ஆசாமியின் பெயர் ஹரிஷ் சந்திரா என்பதும், சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் ஹரிஷ் சந்திராவை கைது செய்துள்ள டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நல்லவேளை கடவுள் என் உயிரை காப்பாற்றினார். டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மாலிவாலின் ட்விட்டர் பதிவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
அதில், “டெல்லியில் சட்டம் ஒழுங்கு என்ன ஆனது? மகளிர் ஆணையத் தலைவிக்கு கூட பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு குண்டர்களின் மன உறுதி அதிகரித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் துணை ஆளுநருக்கு மட்டுமே இந்தப் பணி வழங்கப்பட்டுள்ளது.
துணை ஆளுநர் விகே சக்சேனா சில நாட்கள் அரசியலில் இருந்து விலகி சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைநகரும், யூனியன் பிரதேசங்களில் ஒன்றான டெல்லியில், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு துறை துணைநிலை ஆளுநரின் கீழ் வருகிறது. இதனை குறிப்பிட்டே தற்போதைய டெல்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
நாட்டின் தலைநகரில் டெல்லி மகளிர் ஆணைய தலைவருக்கே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு குறித்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
வெடி விபத்தில் தொழிலாளிகள் மரணம்: முதல்வர் நிவாரணம்!
ராமர் பாலம் தொடர்பான சுப்பிரமணிய சுவாமி வழக்கு முடித்து வைப்பு!