அடுத்தடுத்து பாஜகவினர் கைது…. தமிழகத்திற்கு 4 பேர் குழுவை அனுப்பிய தலைமை!
தமிழ்நாட்டில் பாஜக தொண்டர்கள் மாநில அரசால் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிப்பதற்காக 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசியத் தலைமை அறிவித்துள்ளது.
சென்னை பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிக்கம்பம் மாநகராட்சி அதிகாரிகளால் கடந்த 21ஆம் தேதி அதிகாலை அகற்றப்பட்டது.
இதற்கிடையே பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த ஜேசிபி வாகனத்தையும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் தாக்கினர்.
இதனையடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகியும், அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமான அமர் பிரசாத் ரெட்டி உட்பட 5-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி, முதல்வர் குறித்து அவதூறு கருத்துகளை பரப்புவது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் பாஜகவினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தூத்துக்குடி பாஜக ஆதரவாளர் ஜான் ரவி என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பாஜகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு வேண்டுமென்றே பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் இதுகுறித்து டெல்லி பாஜக தலைமையிடமும் புகாரளித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தொண்டர்களுக்கு மாநில அரசு அளிக்கும் நெருக்கடிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தேசிய பாஜக தலைமை ஒரு குழு அமைத்துள்ளது.
பாஜக தேசிய பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தொண்டர்களிடம் தமிழக அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. இதுதொடர்பாக தமிழகத்திற்கு நேரில் வந்து பாஜக தொண்டர்களிடம் விசாரிப்பதற்காக சதானந்த கவுடா, சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை விரைவில் பாஜக தலைமையிடம் அறிக்கை அளிக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்