டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதியில் ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (ஜனவரி 7) அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பாஜக சார்பில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் தேதியை அறிவிப்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ”மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும்.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி நிறைவடையும். வேட்புமனு பரிசீலனை ஜனவரி 18ஆம் தேதியும், வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாக ஜனவரி 20ஆம் தேதியும் குறிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தலும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்” என்று ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
மேலும் டெல்லி சட்டசபை தேர்தல் குறித்த முக்கிய தகவல்களை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். அதன்படி, டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. அவற்றில் 58 பொது தொகுதிகளும் மற்றும் 12 தொகுதிகள் பட்டியல் சாதியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1.55 கோடியாக உள்ள நிலையில், 83.49 லட்சம் ஆண் வாக்காளர்களும், 71.74 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
அவர்களில் 25.89 லட்சம் பேர் இளம் வாக்காளர்களும், 2.08 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்களும், 1,261 திருநங்கைகளும் உள்ளனர். 1.09 லட்சம் வாக்காளர்கள் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகர் பிரபுவை தாக்கிய நோய்… மூளை அனீரிசிம் வர என்ன காரணம்?
தமிழ்நாட்டில் ஹெச்எம்பிவி வைரஸ் எங்கெங்கே? சுகாதாரத் துறை சொல்வதை கவனிங்க!