டிஜிட்டல் திண்ணை: ஜெ. நினைவு தினம்- தள்ளிப்போன பொதுக்குழு வழக்கு: எடப்பாடி ஷாக்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் டெல்லி சோர்சின் சில மெசேஜ்கள் வந்து விழுந்தன. அவற்றைப் படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது‌.

“ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே பொதுக்குழுவில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து நிலைகளில் இருந்தும் பன்னீர்செல்வம் எடப்பாடியால் நீக்கப்பட்டார். இந்தப் பொதுக்குழுவை எதிர்த்து பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

இந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில்  ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி மேல் முறையீடு சென்றார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள்  துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர்  ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதனால் எடப்பாடி தரப்பினர் உற்சாகமானார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்தார்கள்.

இந்த வழக்கு கடந்த நவம்பர் 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி,  சுதான் சூ துலியா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு ஓரிரு நாள் முன்பு அதாவது நவம்பர் 19 ஆம் தேதியன்று எடப்பாடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், ‘அதிமுகவின் சட்ட விதிகளின்படி பன்னீர்செல்வம் எவ்வித சட்ட நிவாரணமும் கோருவதற்கு தகுதியற்றவர்.  அவரது மனு அற்பமான மனு’ என்றெல்லாம் அதில் சொல்லப்பட்டிருந்தது.  எப்படியாவது இந்த வழக்கு விசாரணை விரைவாக முடித்து தீர்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என்று  எடப்பாடி காய் நகர்த்திய நிலையில்… அந்த காய் நகர்த்தலையே தனக்கு சாதகமாக பயன்படுத்தினார் பன்னீர். அதாவது நவம்பர் 19 ஆம் தேதி எடப்பாடி தன்னைப் பற்றி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாய்தா அஸ்திரத்தை வீசினார் பன்னீர். உச்ச நீதிமன்றமும் இந்த  சட்ட ரீதியான பன்னீரின் கோரிக்கையை ஏற்று வழக்கை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதற்கிடையே  கடந்த வாரம் எடப்பாடியில் தனது கட்சி முக்கிய பிரமுகர்களை சந்தித்தபோதும், அதன் பின் சென்னை வந்து ஆளுநரை சந்திப்பதற்காக நிர்வாகிகளுடன் ஆலோசித்தபோதும் எடப்பாடி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ‘சீனியர் லாயர்ஸ்கிட்ட பேசினேன்.  உச்ச நீதிமன்றத்துல வழக்கு நமக்கு தகமாகத்தான் போயிக்கிட்டிருக்குனு சொல்றாங்க. நவம்பர் 30 ஆம் தேதி தீர்ப்பு வந்ததும் அம்மா இறந்தநாளான டிசம்பர்  5 ஆம் தேதி மெரினாவுக்கு நாம வெற்றி ஊர்வலமாக போவோம்’  என்று நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார் எடப்பாடி. மேலும் இந்த வழக்கு பற்றி சி.வி. சண்முகத்திடம் தொடர்ந்து ஆலோசித்து வந்திருக்கிறார். சட்ட ரீதியாக, அரசியல் ரீதியாக இப்படி என்றால் ஆன்மீக ரீதியாக சில பூஜைகளையும் எடப்பாடி பழனிசாமி நடத்தியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் நவம்பர் 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவேண்டிய இந்த வழக்கு டிசம்பர் 6 ஆம்  தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற பதிவுத் துறையின்  பட்டியலில் மாற்றப்பட்டிருந்ததை   எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் 27 ஆம் தேதி  அறிந்தனர். இதைப் பார்த்து உடனடியாக அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் கொடுத்தனர். இதைக் கேட்ட எடப்பாடி ஷாக் ஆகிவிட்டார். ‘எப்படிங்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 30 ஆம் தேதிதானே ஒத்தி வச்சாங்க? இடையில அந்த தேதியில விசாரணைக்கு வந்தால்தானே மறுபடியும் மாற்ற முடியும்?’ என்று எடப்பாடி தனது தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்டிருக்கிறார். வழக்கறிஞர்களோ, ‘இதையேதான் நாங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தோம். நிர்வாக காரணங்களுக்காக தள்ளிப் போடப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்’ என்று எடப்பாடியிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியோடு குழப்பமும் ஏற்பட்டது எடப்பாடிக்கு.

உடனடியாக, இதுபற்றி இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்விடம் நவம்பர் 29 ஆம் தேதியே முறையீடு செய்தனர் எடப்பாடி தரப்பு சீனியர் வழக்கறிஞர்கள்.  வழக்கு விசாரணை தள்ளிப் போவதையும், அதை ஒட்டி எடப்பாடி தரப்பு இன்று மென்ஷன் செய்வதையும் அறிந்துகொண்ட பன்னீர் தரப்பு வழக்கறிஞர்கள் 29 ஆம் தேதியே உச்ச நீதிமன்றத்துக்கும் வந்துவிட்டனர். எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘வழக்கு நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் ஏன் டிசம்பர் 6 ஆம் தேதிக்கு மாறியது?’ என்று  கேட்டிருக்கிறார். அப்போது பன்னீர் தரப்பு வழக்கறிஞர், ‘இந்த வழக்கு விசாரணையில் மேலும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியதால் இவ்வழக்கை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், ‘அதிமுக கட்சியின் செயல்பாடுகள் சீராக நடக்க இந்த வழக்கு விசாரணையை விரைவில் முடித்துத் தீர்ப்பு தாருங்கள்’ என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது  உச்ச நீதிமன்ற நீதிபதி, ‘பதிவாளர் அலுவலகம் பட்டியலிட்டதுபோல டிசம்பர் 6 ஆம் தேதி வழக்கு விசாரிக்கப்படும்’ என்று கூறிவிட்டார்.

இந்தத் தகவல் எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் ஏமாற்றம் அடைந்தார். டிசம்பர் 5  ஆம் தேதி அதிமுகவின்  மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நினைவு தினம்.  நவம்பர் 30- ஆம்  தேதி தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும், அதை ஒட்டி வெற்றிகரமாக ஜெயலலிதா நினைவு தின நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தள்ளிப் போனதால் எடப்பாடி ஏமாற்றம் அடைந்திருக்கிறார். அதேநேரம் உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் வழக்கறிஞர்கள் இந்த விசாரணை தேதி தள்ளிப் போனதையே தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக கருதி மகிழ்ச்சி அடைந்ததையும்  எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு  செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கத்தார் : குவியும் ரசிகர்கள்… கொடுமையில் ஒட்டகங்கள்… பீட்டா யார் பக்கம்?

ஆப்பிள் ஐபோன் Vs எலான் மஸ்க்: என்ன நடக்கிறது?

+1
0
+1
4
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *