பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை ஆலோசித்து வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 8ஆம் தேதி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பெரியார் பற்றி கூறிய பல்வேறு கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது பேச்சை பாஜகவினர் வரவேற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, அன்புமணி ராமதாஸ் என பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் காரையும் அடித்து உடைத்தனர்.
இதனையடுத்து சீமான் மீது சென்னை, கோவை, நெல்லை, தஞ்சாவூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் வழக்கறிஞர் அணியினரே பல மாவட்டங்களில் சீமான் மீது புகார் கொடுத்துள்ளனர்.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், ”எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து சீமான் எந்நேரத்திலும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடும் நிலையில்… சீமானை கைது செய்தால், இடைத் தேர்தலில் அவருக்கு செல்வாக்கை அதிகரிக்கச் செய்யுமோ என்ற ஆலோசனையும் அரசியல் ரீதியாக ஆட்சி மேலிடத்தில் நடந்தது.
அதேநேரம் சீமானை கைது செய்யக் கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் “தற்போது உயர் நீதிமன்றம் பொங்கல் விடுமுறை. விடுமுறை கால நீதிபதியாக திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் இருக்கிறார். இவர் ஏற்கனவே மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் வழக்கில் அரசுத் தரப்புக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தவர். அதனால் பொங்கல் விடுமுறை முடிந்து சீமானை கைது செய்யலாம் என்று கூட ஆலோசிக்கப்பட்டது” என்கிறார்கள் திமுகவின் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.
திங்கள் கிழமை பொங்கல் விடுமுறை முடிந்து வழமையான நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்குகின்றன. இந்த சூழலில் சீமான் மீது தமிழகம் முழுதும் கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக அவரிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்துவதற்கு போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சீமானுக்கு சம்மன் அனுப்பவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி விவகாரத்திலும் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். அவரும் விசாரணைக்கு தனது வழக்கறிஞர் மனைவி கயல்விழியோடு ஆஜரானார்.
அதேபோல பெரியார் விவகாரத்திலும் சீமானுக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரித்து, விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் கைது செய்யலாம் என்பதே போலீசாரின் இப்போதைய திட்டம் என்கிறார்கள் காவல் வட்டாரங்களில்!
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: இடைத் தேர்தல் வியூகத்தில் ஸ்டாலின் செய்த திடீர் மாற்றம்!
பிக்பாஸ் தமிழ் 8 நாளை இறுதி சுற்று : 50 லட்சத்தை வெல்ல போவது யார்?
சைஃப் அலிகான் உடலில் இருந்த 2.5 இஞ்ச் கத்தி முனை… உயிர் பிழைத்தது அதிசயம்தான்!