முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 12) ரத்து செய்தது.
2022ஆம் ஆண்டு திண்டிவனத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் நகர காவல் நிலையங்களில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, “சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான். அவரது பேச்சை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதேசமயம் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு காவல்துறை தரப்பில், “அவரது பேச்சு அரசியலில் இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இருந்ததால் இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 12) தீர்ப்பு வழங்கிய நீதிபதி காவல்துறையின் வாதங்களை ஏற்க மறுப்பதாக கூறினார். பொருந்தாத சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஹிண்டன்பர்க் அறிக்கை: பங்குச்சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் டார்கெட்… பாஜக குற்றச்சாட்டு!
புதிய நான்கு மாநகராட்சிகள்.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!