சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 40 எம்.எல்.ஏ-க்கள் திமுகவில் இணைய இருந்ததாகவும், அதனை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டார் என்றும் பேசியிருந்தார்.
இதை எதிர்த்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்தநிலையில், தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், ”அப்பாவு தனது பேச்சில் எந்த எம்.எல்.ஏ-க்கள் பெயரையும் குறிப்பிடவில்லை. 5 ஆண்டுகாலம் அதிமுக தனது ஆட்சியை பூர்த்தி செய்தது. பாபு முருகவேல் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய என்ன உரிமை உள்ளது” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கடந்த அக்டோபர் 22ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “அப்பாவு கூறியது தகவல் தானே தவிர அவதூறு கிடையாது. அதுபோன்று சம்பவம் நடந்த போது அதிமுக உறுப்பினராக இல்லாத பாபு முருகவேலுக்கு இதில் எந்த பாதிப்பும் இல்லை. பாதிக்கப்படாதவர் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” எனவும் வாதிட்டார்.
புகார்தாரர் பாபுமுருகவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “சபாநாயகரின் பேச்சு நிச்சயமாக அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. புகார்தாரர் கட்சியில் சாதாரண உறுப்பினர் மட்டும் அல்ல. வழக்கறிஞர் அணி இணை செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதனால் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய புகார்தாரருக்கு உரிமை உள்ளது’ என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சபாநாயகரின் பேச்சு தொடர்பாக அதிமுக சார்பில் எந்த புகாரும் தாக்கல் செய்யப்படவில்லை. தனிப்பட்ட முறையில் புகார்தாரர் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை என கூறி, சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தார்.
மேலும், சபாநாயகர் பேச்சு வெளியான மறுநாள் அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் அமைச்சர் பதவிக்காக அப்பாவு இதுபோன்று பேசியிருக்கிறார் என்று கூறியிருக்கிறாரே தவிர கட்சிக்கு அவதூறு ஏற்படுத்தியதாக சொல்லவில்லை எனவும் ஜெயக்குமாரும் எந்த அவதூறு வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
’டில்லி வில் ரிடர்ன் சூன்’ – ‘கைதி – 2’ குறித்து லோகேஷ் கனகராஜ்
வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்… திமுக தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனை!