மக்களாட்சியின் மரணங்கள்: ராகுல் காந்தி கூறுவது என்ன?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பில் நாம் மக்களாட்சியின் மரணத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று மிகவும் கடுமையான வார்த்தைகளால் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியை விமர்சித்தார்.

இதை எதிர்க்கட்சி தலைவர்களின் வழக்கமான அரசியல் என்று புறமொதுக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. மேலும் அவர் மீதும், அவருடைய அன்னை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீதும் பன்னிரண்டு ஆண்டுகளாக நடந்துவரும் நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை அவர்கள் இருவரையும் தொடர்ந்து விசாரித்து வருவதால் அவர் இவ்வாறு கூறுகிறாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இந்தக் கேள்விகளைக் குறித்து சிந்திக்க வேண்டுமென்றால் நாம் மக்களாட்சி என்றால் என்ன என்பதை குறித்து சிந்திக்க வேண்டும். அப்போதுதான் மக்களாட்சி எத்தனை விதங்களில் மரணமடைய முடியும், அது உயிருடன் இருப்பதற்கான அடையாளம் என்பதை நாம் அறிய முடியும். ஒரு சிலர் மிக எளிதாக ராகுல் காந்தியால் இப்படி குற்றம்சாட்ட முடிகிறது; நாம் அதை விவாதிக்க முடிகிறது. அப்படி கருத்து சுதந்திரம் நிலவும்போது இது மக்களாட்சிதானே என்று கேட்கிறார்கள். பிரச்சினை அவ்வளவு எளிமையானது அல்ல.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து, பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து என்னென்ன பிரச்சினைகள் எழுந்துள்ளன, அவை எப்படிக் கையாளப்படுகின்றன என்பதை எல்லாம் நாம் சிந்தித்து பார்த்தால்தான் மக்களாட்சி சிறப்பாக செயல்படுகிறதா அல்லது நடைப்பிணமாக அலங்கரிக்கப்பட்டு வரவேற்பறையில் அமர வைக்கப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த எட்டாண்டுகளில் நடைபெற்ற பல சம்பவங்களைத் தொகுப்பதென்றால் இந்த ஒரு சிறு கட்டுரை போதாது. ஒரு விரிவான நூலே எழுத வேண்டும். அந்த அளவு மக்களாட்சி குற்றுயிரும் கொலையுயிருமாக நடைப்பிணமாக்கப்பட்டிருப்பதைத்தான் ராகுல் காந்தி குறிப்பிடுகிறார்.

மக்களாட்சியின் மையம் குடிநபரின் சுதந்திரம்

தலைவர்கள் என்ன பேச முடிகிறது, என்ன விவாதிக்க முடிகிறது என்பது மட்டும் சுதந்திரமல்ல. மக்களாட்சியின் அடிப்படையே குடிநபர் இறையாண்மை என்பதுதான். அதாவது ஆங்கிலத்தில் சிட்டிசன் என்று அழைக்கப்படக்கூடிய ஒவ்வொரு குடிநபருக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதுதான் மக்களாட்சியின் அடிப்படை.

முதலில் நாட்டை பெரிதும் அதிர வைத்தது சிந்தனையாளர்கள் கொலைகள். பன்சாரே, கல்புர்கி, கெளரி லங்கேஷ் என்று வரிசையாக பல மாற்றுக் கருத்து கொண்டவர்கள் கொல்லப்பட்டார்கள். கொன்றவர்கள் ஏதோ ஒருவிதத்தில் மத அடையாளவாத அரசியல் சார்ந்தவர்கள் என்றுதான் தெரிகிறது. இந்தக் கொலைகளைக் கண்டித்து பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்கள்.

மக்களாட்சியில் தங்கள் கருத்துகளுக்காக சிந்தனையாளர்கள் கொல்லப்படுவதென்பது எவ்வளவு கொடூரமானது? அரசு அதைக்கண்டு பதைபதைக்க வேண்டாமா? பிரதமரும் உள்துறை அமைச்சரும் தனிப்பட்ட முறையில் குற்றச் செயல்களைக் கண்டிக்க வேண்டாமா? மாநில அரசுடன் இணைந்து விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டாமா?  நாட்டின் மனசாட்சி போன்ற எழுத்தாளர்களும், கவிஞர்களும் தங்கள் விருதுகளைத் திருப்பிக் கொடுத்தால் அவர்களை அழைத்துப் பேச வேண்டாமா? கொலையாளிகள் மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூற வேண்டாமா? இது எதுவுமே நிகழவில்லை.

சமூகமெங்கும் வெறுப்பு அரசியல் பரவியது. பசு பாதுகாப்பு என்ற பெயரிலும், மாட்டிறைச்சி உண்பதற்கு எதிராகவும் பலர், குறிப்பாக இஸ்லாமியர்கள் கும்பல்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்கள். சமூகத்தில் பரவும் இந்த வன்முறையைக் கண்டித்து, சிறுபான்மை இஸ்லாமியர்கள், தலித்துகள், பெண்கள் தாக்கப்படுவதை நிறுத்தக் கோரி 2019ஆம் ஆண்டு 49 முன்னணி கலைஞர்கள், அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம் போன்ற திரைப்பட இயக்குநர்கள் உட்பட்ட பிரபலமான கலையுலகத்தினர் பிரதமருக்குத் திறந்த மடல் ஒன்றை எழுதினார்கள்.

பிரதமர் அவர்களை அழைத்து பேசவில்லை. அது குறித்து எந்தவித பதைபதைப்பையும் வெளிப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக அரசுக்கு ஆதரவான திரைக்கலைஞர்கள் 69 பேர் பிரதமரின் நற்பெயரை கெடுப்பதற்காகவே இப்படி ஒரு திறந்த கடிதம் எழுதப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். வன்முறையைக் கண்டித்து கடிதம் எழுதியவர்கள் மீது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக பிகாரில் ஒரு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பீமா கொரேகான் என்ற இடத்தில் தலித் அமைப்புகள் திரண்டு நடத்திய கருத்தரங்கத்தில் கலகம் விளைவித்தது தொடர்பாக முகாந்திரமின்றி குற்றம் சாட்டப்பட்டு நாட்டின் முக்கியமான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் மடிக்கணினிகளில் யாரோ எங்கிருந்தோ சில பிரச்சினைக்குரிய செய்திகளை தரவேற்றம் செய்திருப்பது வெட்ட வெளிச்சமான பிறகும், இவர்கள் செய்த குற்றமென்ன, விசாரணை என்ன என்ற எந்த தெளிவும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் அண்ணல் அம்பேத்கரின் உறவினரான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டேவும் இருக்கிறார். கெளதம் நவ்லக்கா என்ற சிந்தனையாளர் இருக்கிறார். ஸ்டேன் சாமி என்ற தன்னலமற்ற கிறிஸ்துவத் துறவி சிறையில் சரியான சிகிச்சை வழங்கப்படாமல் இறந்தே போய்விட்டார். உலகின் பல பகுதிகளிலிருந்தும் நோம் சாம்ஸ்கி உள்ளிட்ட அறிஞர்கள் இவர்களை விடுதலை செய்யக் கோரியும் அரசு இவர்களைச் சிறையில் அடைத்தே வைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றால் மிகையாகாது.

இதெல்லாம் போதாதென்று தனி நபர்களின் அந்தரங்கத்தில், குறிப்பாக எதிர்க்கட்சிகளின், ஊடகங்களின் செயல்பாடுகளை வேவு பார்க்க அரசு முனைந்துள்ளதா என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. பெகாஸஸ் என்ற உளவு மென்பொருளை, அந்நிய நாட்டினரின் தொலைப்பேசிகளை ஒட்டுக்கேட்க உளவு அமைப்புகள் பயன்படுத்தும் சட்டத்துக்குப் புறம்பான மென்பொருளை இந்திய அரசு வாங்கி, உள் நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பிரசாந்த் கிஷோர் என்ற தேர்தல் ஆலோசகர் ஆகியோரின் செல்பேசிகளை ஒட்டுக் கேட்க பயன்படுத்தியுள்ளது என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதைப் போன்ற ஓர் ஒட்டுக்கேட்கும் குற்றச்சாட்டில்தான் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் பதவி விலகினார்; அது மக்களாட்சியின் மகத்தான வெற்றியாகக் கருதப்பட்டது. வாட்டர்கேட் விவகாரம் என்று உலக வரலாற்றில் குறிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து எந்த விசாரணையும் இல்லை; அரசு பொறுப்பேற்கவோ, பொறுப்பான விளக்கம் தரவோ தயாராக இல்லை.

இவையெல்லாம் சாம்பிள்தான். இன்னும் முன்னாள் ஜே.என்.யூ. மாணவர் தலைவர் உமர் காலித் சிறைவாசம், சுபைர் மெஹ்தா என்ற ஊடகவியலாளரின் கைது, ஜிக்னேஷ் மெவானி கைது என்றெல்லாம் பட்டியல் இட்டால் அரசின் எதேச்சதிகார செயல்பாடுகள் முடிவற்று நீளும். உண்மையில் இதெல்லாம் எப்படி ஒரு மக்களாட்சியில் அனுமதிக்கப்படுகிறது என்பதே பெரியதொரு கேள்விக்குறியாகும்.

மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்தல், ஆட்சியைக் கவிழ்த்தல்

இந்திய ஒன்றியம் என்றே அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது. மாநிலங்களிலேயே அரசுகள் இருப்பதாகவும், அவற்றின் ஒன்றிய அரசாங்கமே இந்திய அரசாங்கம் என்றும் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அதிகாரம் ஒன்றிய அரசாங்கத்திடம் குவிவதும், மாநில அரசுகள் என்பவை பேரரசுக்குக் கட்டுப்பட்ட குறு நில அரசுகள் போல நடத்தப்படுவதும் இந்தியாவின் மக்களாட்சியைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. காஷ்மீரின் மாநில அந்தஸ்தையே அதிரடியாக நீக்கிவிட்டது பாஜக அரசு. இது அரசியலமைப்பு சட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்றால் மிகையாகாது. அதைத்தவிர எல்லா எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களையுமே நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது.

இந்தச் செயல்பாட்டில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி மூன்று விதங்களில் செயல்படுகிறது. ஒன்று மாநிலங்களில் மாற்றுக் கட்சி அரசு அமைந்தால் அதைப் பகிரங்கமாக சதி செய்து கவிழ்க்கிறது. இரண்டு, மாநிலங்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்காமல் புறக்கணிக்கிறது. மூன்றாவதாக, மாநில ஆளுநர்களை ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக மாற்றி, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிராகப் பேசவும், செயல்படவும் தூண்டுகிறது. இவையெல்லாமே அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள மக்களாட்சி நெறிமுறைகளுக்கு எதிரானவை. ஆனால், எந்தவித தயக்கமும் இன்றி ஒன்றிய பாஜக அரசு இந்தச் செயல்களில் ஈடுபடுகிறது.

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைப் பிளந்து ஆட்சியைக் கைப்பற்றியது. கர்நாடகாவிலோ பகிரங்கமாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசி, பேரம் பேசி வாங்கி ஆட்சியைக் கவிழ்த்து அரசைக் கைப்பற்றியது. சமீபத்தில் மகாராஷ்டிரத்தில் சிவசேனா கட்சியைப் பிளந்து அங்கும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு வெளிப்படையாக ஆளுநர்கள் ஒத்துழைக்கிறார்கள். ஒன்றிய அரசு சொல்வதையெல்லாம் செய்கிறார்கள்.

Deaths of Democracy

தமிழகத்தில் ஆளுநர் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க-வின் கொள்கைகளுக்கு, கோட்பாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து பொதுவெளியில் பல கருத்துகளைப் பேசி அரசியல் செய்து வருகிறார். அவரது பணி என்பது ஒரு குறியீட்டு கெளரவ தலைமை என்பதுதானே தவிர, அவர் ஒன்றிய அரசின் அரசியல் முகவரல்லர். ஆனால் தொடர்ந்து அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தி தன் பதவியின் மாண்பினை சிதைத்து வருகிறார். மேற்கு வங்காளத்தில் இவ்விதம் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்குத் தொல்லை கொடுத்து வந்தவருக்கு பதவி உயர்வு கொடுத்து குடியரசுத் துணைத்தலைவராக ஆக்கியுள்ளது பாரதீய ஜனதா கட்சி. அரசியலில் மாற்றுக் கருத்துகளே இருக்கக் கூடாது என்ற சகிப்பின்மையைத் தொடர்ந்து பரப்பி வருகிறது. அனைத்து அதிகாரங்களையும் ஒரே புள்ளியில் குவிக்கிறது.

அரசின் ஊதுகுழல்களாகும் ஊடகங்கள்

Deaths of Democracy

இது போன்ற அரசின் எதேச்சதிகார செயல்பாடுகளை, அவற்றை எதிர்க்கும் எதிர்க்கட்சியினரின் குரலை மக்களிடம் கொண்டு செல்லவேண்டியது ஊடகங்கள்தான். ஆனால், பெரும்பாலான ஊடகங்களை அரசு ஊடுருவியுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. எல்லா பிரச்சினைகளிலும் ஒன்றிய அரசுக்கு ஆதரவான நிலைப்பாடுகளையே இந்த ஊடகங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் திணிக்கின்றன. ரஃபேல் ஊழல், பெகாசஸ் ஊழல் போன்ற பிரமாண்டமான ஊழல்கள் வெளிப்பட்டாலும் இவை சிறிதும் கண்டுகொள்வதில்லை.

நாட்டின் பொருளாதாரம் பலவிதங்களில் சிக்கலடைந்து வருகிறது. பணவீக்கம் அதிகரிக்கிறது. விலைவாசி அதிகரிக்கிறது. ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் வீழ்கிறது. எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் ஏறுகிறது. வேலைவாய்ப்புகள் குறைகின்றன. வேலையிழப்பு அதிகரிக்கிறது; சிறு, குறு தொழில்கள் தொடர்ந்து அழிவைச் சந்திக்கின்றன. எதையெல்லாம் குறை கூறி மக்கள் கவனத்தை ஈர்த்து பாஜக ஆட்சிக்கு வந்ததோ, அந்த பிரச்சினைகளெல்லாம் முன்பைவிட பன்மடங்கு அதிகமாக தீவிரமாக மக்களை பாதிக்கின்றன. ஆனால் பொருளாதார வல்லுநர்கள், சிந்தனையாளர்கள், எதிர்க்கட்சிகளின் கண்டன குரல்கள் மக்களை சென்றடையவிடாமல் ஊடகங்கள் தவிர்க்கின்றன. போலியாக விவாதங்களை நடத்தி அரசின் ஊதுகுழல்களாகச் செயல்படுகின்றன.

அரசின் கட்டுப்பாட்டில் சுயேச்சையான அமைப்புகள், நீதித்துறை

சுதந்திர இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தலைமை நீதிபதியின் செயல்பாடுகளைக் குறைகூறி, நீதித்துறை செயல்பாடுகள் சீரழிவதாகக் கூறி பத்திரிகையாளர்களைச் சந்தித்ததும் நடந்தது. பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்படுவது, விசாரிக்காமல் விடப்படுவது, தீர்ப்பு வழங்காமல் தாமதப்படுத்துவது என்று கேள்வி கேட்க வழியில்லாமல் ஐயத்துக்குரிய முறையில் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களின் செயல்பாடுகள் அமைகின்றன. இதை விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி தண்டிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுவதால் பலரும் கேள்வி எழுப்ப தயங்குகின்றனர்.

Deaths of Democracy

உதாரணமாக 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி சலமேஷ்வர் கூறியுள்ளார். ஆனால் ஏன் அந்த தீர்ப்பு வெளியாகவில்லை, ஆகியிருந்தால் அவர் கைது செய்யப்பட்டிருப்பாரே, முதல்வராகியிருக்க முடியாதே ஆகிய கேள்விகள் எழுகின்றன. அவ்வாறு வழங்கப்படாமல் உறங்கிய தீர்ப்பு, ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலா முதல்வராவதைத் தவிர்ப்பதற்காக தக்க தருணத்தில் எப்படி வெளியிடப்பட்டது என்பதும் விடைதெரியாத கேள்விதான்.

இதேபோலத்தான் சுயேச்சையாக செயல்பட வேண்டிய அமைப்புகளான தேர்தல் ஆணையம், வரிமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய அனைத்துமே ஒன்றிய அரசை ஆளும்கட்சியின் விருப்பத்துக்கேற்ப செயல்படுகின்றன என்று பாமர மக்கள்கூட எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். அவர்கள் சரி, தவறு என்றுகூடப் பார்ப்பதில்லை. அது அப்படித்தான் என யதார்த்தமாகவே பேசுகிறார்கள். ஒன்றிய ஆளும்கட்சியை எதிர்த்துக்கொண்டால் அமலாக்கத்துறை ரெய்டு வரும் என்பது பொதுப்புத்தியாகவே மாறிவிட்டது.

இதற்கெல்லாம் உதாரணங்களைக் கொடுத்துத் தொடர்ந்து எழுதினால் ஒரு பெரிய நூலாகவே உருவாகிவிடும். ஆங்கிலத்தில் சில நூல்கள் வந்துள்ளன. அவற்றை குறித்து பின்னர் எழுதுகிறேன். இப்போதைக்கு ராகுல் காந்தி கூறியுள்ளதை நாம் கவனமாக பரிசீலிக்க கடமைப்பட்டுள்ளோம் என்று கூறி நிறைவு செய்கிறேன்.

கட்டுரையாளர் குறிப்பு

Deaths of Democracy

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

ஹிட்லர் வென்ற கதை தெரியாதா? மோடி மீது ராகுல் விமர்சனம்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *