பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. Death threat to Modi
சென்னையை அடுத்துள்ள பம்மலில் கடந்த வாரம் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் எவ்வளவோ பிரதமரை சந்தித்துள்ளோம். ஆனால், இவ்வளவு மட்டமாக பேசக் கூடிய பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை.
திமுகவை அழித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார். திமுகவை அழிக்க முடியுமா? திமுக சாதாரணமான இயக்கம் இல்லை, பல பேர் உயிர் தியாகம் செய்து வளர்க்கப்பட்ட இயக்கம். ரத்தத்தை சிந்தி வளர்த்த இயக்கம் தான் திமுக.
வரலாற்றில் இந்த திமுகவை யார் யாரோ ஒழிக்கிறேன் என கூறியதுண்டு. ஆனால் இறுதியில் திமுகவை அழித்துவிடுவேன் எனக் கூறியவர்கள்தான் ஒழிந்து போய் இருக்கிறார்களே தவிர, திமுக எப்போதும் கம்பீரமாக நிற்கும்.
நான் அமைச்சர் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். இல்லையென்றால் பீஸ் பீஸாக ஆக்கிடுவேன்” என பேசியிருந்தார்.
நிர்வாக திறமையற்ற இந்த திமுக ஆட்சியாளர்கள் தன்னுடைய ஆட்சியின் அவலட்சணத்தை மறைக்க, அமைச்சர்களை ஏவி விட்டு பிரதமருக்கே மிரட்டல்விடும் அளவிற்கு சென்றுள்ளனர். இதன் மூலம் இந்த திமுக ஆட்சி விரைவில் அஸ்தமனமாகப்போவது தெரிகிறது..! pic.twitter.com/7LNMJmhEPj
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 13, 2024
அமைச்சரின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடிக்கு அமைச்சர் தாமோ அன்பரசன் கொலை மிரட்டல் விடுத்ததாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சய்சய் ரஞ்சன் டெல்லி காவல்துறையில் புகார் செய்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், தற்போது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என ஐபிசி 153, 268, 503, 505, 506 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி காவல்துறை நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளது.
பிரதமர் பேச்சுக்கு பதிலடி மட்டுமே! Death threat to Modi
முன்னதாக கடந்த மாத இறுதியில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி நெல்லையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,
“திமுக பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறது. திமுகவால் இங்கு இருக்க முடியாது.
மக்களவை தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும். திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசினாரே ஒழிய, பிரதமர் மோடியை குறிப்பிட்டு பீஸ் பீஸ் ஆக்கிடுவேன் என்று பேசவில்லை என திமுக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதானி குழும பங்குகள் ஒரே நாளில் ரூ.90,000 கோடி சரிவு: காரணம் என்ன?