பாலியல் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை: நிறைவேறிய மசோதா!

Published On:

| By Kavi

Death penalty for sex offenders

பாலியல் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதாவான ‘அபராஜிதா பெண் மற்றும் குழந்தை (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் திருத்தம்) மசோதா 2024’, அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவிப்பை தொடர்ந்து,  மேற்கு வங்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மாநில சட்ட அமைச்சர் மோலோய் கட்டக், மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார்.

மசோதா மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,

“இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க, முன்மாதிரியான மசோதா. நல்ல எண்ணம் உள்ளவர் எவரும் இதை ஆதரிப்பர். இந்த மசோதாவில் கையெழுத்திட மாநில ஆளுநரை, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்.

ஆர்.ஜி.கர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் தொடர்பான வழக்கில் மாநில காவல் துறை விரைவாக குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்போம் என்று இறந்தவரின் குடும்பத்தினரிடம் நான் கூறியிருந்தேன்.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இப்போது, சிபிஐயிடம் இருந்து எங்களுக்கு நீதி வேண்டும். குற்றவாளிகளை சிபிஐ தூக்கிலிட வேண்டும்” என தெரிவித்தார்.

மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, இந்த மசோதாவுக்கு முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்.

அதேநேரத்தில், இந்த மசோதாவில் சில திருத்தங்களை அவர் முன்வைத்தார். எனினும், அந்த திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

மசோதா மீதான விவாதத்தை அடுத்து குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதனையடுத்து, இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் அல்லது நபர்களின் செயல்களால், பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்தாலோ அல்லது உடல் ரீதியாக முடக்கப்பட்டாலோ குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்க முடியும்.

மேலும், பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்க முடியும். ஆளுநரின் ஒப்புதலை அடுத்து இந்த மசோதா சட்ட வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: ஆரோக்கியத்தின் மீதான அதீத அக்கறையும் ஆபத்துதான்!

டாப் 10 செய்திகள்: ராகுல் காந்தி பிரச்சாரம் முதல் மீனவர்களுக்கு அபராதம் வரை!

கிச்சன் கீர்த்தனா: ரவை ஸ்வீட் கொழுக்கட்டை!

பியூட்டி டிப்ஸ்: பாஸ்மதி ரைஸ் சாப்பிட்டால் மேனி பளபளக்குமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share