உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.
நிமோனியா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இன்று பிற்பகல் 3.05 மணிக்கு காலமானார் என்றும், அவரது உடல் மருத்துவ மாணவர்களின் படிப்புக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர் என்று எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
யெச்சூரி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி
சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரி இயக்கத்தின் விடிவெள்ளியாக இருந்தவர். திறமையான நாடாளுமன்ற உறுப்பினர் என்று முத்திரை பதித்தவர். அனைத்து கட்சியினருடன் நட்பு பாராட்டியதற்காக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு ஆழ்ந்த அதிர்ச்சி, வருத்தத்தை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
சிறு வயதில், மாணவர் தலைவராக தைரியமாக அவசரநிலைக்கு எதிராக நின்றார். அவர் மாணவத் தலைவராக தைரியமாக அவசர நிலைக்கு எதிராக போராடியதால், சிறு வயதிலிருந்தே நீதிக்கான அர்ப்பணிப்பு வெளிப்பட்டது.
தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
அவருடன் நான் கொண்டிருந்த ஆழமான உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். செவ்வணக்கம், தோழர்!!!!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
சீதாராம் யெச்சூரி எனது நண்பர். நாட்டை பற்றிய ஆழமான புரிதலை கொண்டவர். இந்தியா என்ற சிந்தனையின் பாதுகாவலர். எங்களின் நீண்ட விவாதங்களை இனி மிஸ் செய்வேன்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
சீதாராம் யெச்சூரியின் இறப்பு தேசிய அரசியலில் மிகப்பெரிய இழப்பு .
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாடு
அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தமைக்காக சீதாராம் யெச்சூரி எப்போதும் நினைவுகூரப்படுவார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தோழர் சீதாராம் யெச்சூரி காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன்.
மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை
தம் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மூலம் மக்களின் பாதுகாவலனாக திகழ்ந்தவர். தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
விசிக தலைவர் திருமாவளவன்
சீத்தாராம் யெச்சூரி மறைவு இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல; உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.
இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாகும். விடுதலைச் சிறுத்தைகளுடன் மிகவும் நெருக்கமான- இணக்கமான தோழமையைப் போற்றியவர். எமது வெல்லும் சனநாயகம் மாநாட்டில் பங்கேற்று எமக்குப் பெருமை சேர்த்தவர். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி இளம் வயதிலிருந்தே பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். பதின் வயதிலேயே தெலங்கானா போராட்டத்தில் தீவிரம் காட்டிய யெச்சூரி, நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த மாணவர் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி சமூகநீதியிலும் அக்கறை கொண்டவர்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான எனது போராட்டத்திற்கு சீதாராம் யெச்சூரி துணை நின்றது எனது மனதில் இப்போது நிழலாடுகிறது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் ஓபிசி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குவது சாத்தியமில்லை என்று கூறப்பட்ட நிலையில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தேன்.
அதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினேன். பின்னர் மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்களும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி அவர்களும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். அதேபோல் மற்ற தலைவர்களும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
சிம்புவுக்கு நன்றி சொன்ன பவன் கல்யாண்! பின்னணியில் தாராள குணம்
திட்டமிட்டபடி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி… இந்திய அணி செல்லுமா?