மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ரேபரேலி, வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். பின்னர் வயநாடு தொகுதி எம்.பி.பதவியை ராஜினாமா செய்த நிலையில் ரேபரேலி எம்.பி.யாக ராகுல் காந்தி தொடர்கிறார்.
நேற்று (ஜூன் 25) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது குறித்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கேசி வேணுகோபால் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கேசி வேணுகோபால், “மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மக்களவை தற்காலிக சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மற்ற நியமனங்கள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” எனக் கூறினார்.
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
ஏனெனில் 2014-க்குப் பிறகு எந்த எதிர்க்கட்சியும் 54 இடங்களுக்கு மேல் அதாவது மக்களவையில் 10% பதவியைப் பெற்றது இல்லை. இதுவே முதல் முறையாகும்.
ஒரு பெரும் இடைவெளிக்குப் பிறகு, தனிப்பெரும் எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த முக்கியமான நிலையை மீண்டும் பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி, பிரதமருடன் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற முக்கியக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பார்.” எனவும்,
“நாட்டின் கடைநிலை மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் குரலாக ராகுல் காந்தி இருப்பார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரையிலும் நாடு முழுவதும் பயணித்த தலைவர், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை மக்களின் குரலை எழுப்புவார் என்று காங்கிரஸ் தலைவராக நான் நம்புகிறேன்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்துவதன் மூலம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.” என தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் வாழ்த்து
ராகுல் காந்திக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அன்பு சகோதரர் ராகுல்காந்தியை அவரது எதிர்க்கட்சித் தலைவர் என்ற புதிய பங்களிப்பிற்காக இந்தியா வரவேற்கிறது. அவரது குரல் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், ராகுல் காந்தியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து முதல்வர் எக்ஸ் வலைத்தளத்தில் வாழ்த்தியுள்ளார்.
பூபேஷ் பாகேல் வாழ்த்து
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “நம் அனைவருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியின் தருணம். நாட்டு மக்களின் வலுவான குரல் ராகுல் காந்தி. ஆம், அவர் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இனி அனைவருக்கும் குரல் கொடுப்பார். ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்” என வாழ்த்து கூறியுள்ளார்.
பிரமோத் திவாரி வாழ்த்து
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி”ராகுல் காந்திக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள். இறுதியாக, ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. நசுக்கப்பட்ட மக்களின் குரல்கள், இப்போது உங்கள் மூலம் பாராளுமன்றத்தில் அச்சமின்றி எதிரொலிக்கும்” எனப் பேசி உள்ளார்.
செல்வப்பெருந்தகை வாழ்த்து
“ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராவதற்கு வாழ்த்துகள்! இந்த பாசிச ஆட்சி இனி ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் உண்மையான குரலை நாடாளுமன்றத்தில் கேட்கும். நிகழ்ச்சி தொடங்கட்டும்!!!” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உங்கள் சேமிப்பை வைப்பு காப்பீடு காப்பாற்றுமா?
இந்தியன் 2 டிரைலர் : அரைத்த மாவை நவீன ஆட்டுக் கல்லில் அரைத்திருக்கிறாரா ஷங்கர்?