தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்று டிடி தமிழ் நிர்வாகம் இன்று (அக்டோபர் 18) விளக்கமளித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் தூர்தர்ஷன் அலுவலகத்தில் இந்தி மாதம் நிறைவு விழா இன்று (அக்டோபர் 18) நடைபெற்றது. ஆளுநர் ரவி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை விடுத்துவிட்டு பாடல் பாடியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள டிடி தமிழ் நிர்வாகம், “சென்னை தூர்தர்ஷன் நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன்விழா நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக ஒரு வரி தவறிவிட்டது.
கவனக்குறைவாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் மொழியையோ, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையோ அவமதிக்கும் எண்ணம் பாடகர்களிடம் இல்லை. இதனால் ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விநாயகர் சிலை வைத்த விசிக – விசித்திர சர்ச்சை!
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் புறக்கணிப்பு: ஆளுநரை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்!