எடப்பாடி மன்னிப்பு கேட்க வேண்டும்: தயாநிதி மாறன் எச்சரிக்கை!

Published On:

| By Selvam

தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடர உள்ளதாக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் (ஏப்ரல் 17) ஓய்ந்தது. இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட எழும்பூர், புரசைவாக்கத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவிகிதத்தை செலவு செய்யவில்லை.

அப்படியென்றால் அவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல்” என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில், தன் மீது உண்மைக்கு புறம்பான ஆதராமற்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி முன்வைத்திருப்பதாக தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என் மீது சுமத்தியுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். மேலும், எங்களது அரசியல் செயல்பாடுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கருத்தில் கொண்டும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு மிகுந்த பொறுப்புடன் நான் பதிலளிக்க விரும்புகிறேன்.

கடந்த ஏப்ரல் 15, 2024 அன்று மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட எழும்பூர், புரசைவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வேண்டுமென்றே எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்  வகையில் சித்தரிக்கப்பட்டது.

எனது மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் பொது தளத்தில் கிடைக்கின்றன. இப்படிப் பொதுத் தளத்தில் வெளிப்படையான தகவல்களை வேண்டுமென்றே தவிர்த்து, அதற்குப் பதிலாக தவறான தகவல்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் மக்களிடம் பரப்புவது மூலம்,  பொதுவெளியில் மக்களிடம் பேசுவதற்கான அடிப்படை தரத்தையும், குறைந்தபட்ச நாகரிகத்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டார். ஒரு மக்கள் பிரதிநிதியே இப்படி தரம் தாழ்ந்து நடந்துகொள்வது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இச்சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது தவறான பேச்சை திரும்பப் பெறுவதோடு, பொதுவெளியில் மக்களிடத்தில் பங்கிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். இதில் எந்த சமரசமும் கிடையாது. அவ்வாறு மன்னிப்பு கோராவிட்டால், எனது நேர்மை மற்றும் உண்மையைப் பாதுகாக்க அனைத்து சட்ட வழிகளையும் பின்பற்ற நான் தயாராக இருக்கிறேன்.

நாம் முன்னேற்றத்தை நோக்கி செல்லும்போது, தவறான தகவல்கள் மூலம்  ஏற்படும் சவால்களால் திசைதிருப்பப்படாமல், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக நிற்கிறேன். நமது ஜனநாயக விழுமியங்களும், நீதித்துறை அமைப்பும் தொடர்ந்து உண்மையைப் பாதுகாத்து நீதியை நிலைநாட்டும் என்று நம்புகிறேன்.

மேலும் எடப்பாடி பழனிசாமி, தனது தவறான அறிக்கையை திரும்பப் பெறுவதுடன், உடனடியாக பொதுவெளியில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கத் தவறினால் அவர் மீதான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தொடர நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: பொடுகு தொல்லையிலிருந்து விடுபட வீட்டிலேயே வைத்தியம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel