“சென்னை விமான நிலையத்தில் நிலங்கள் வீணடிப்பு” – மக்களவையில் தயாநிதி மாறன் காட்டம்!

Published On:

| By Selvam

சென்னை விமான நிலையத்தில் ஏராளமான நிலங்கள் வீணடிக்கப்பட்டுள்ளது என்று திமுக மக்களவை குழு துணைத்தலைவர் தயாநிதி மாறன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில் நேற்று (ஆகஸ்ட் 9) இந்திய விமான நிலைய சட்டம் 2024 மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய தயாநிதி மாறன்,

“இந்தியாவின் எந்த மாநிலத்தில் மத்திய அரசு விமானத்தை தயாரிக்கிறது? விமான தயாரிப்பில் நாம் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளையேச் சார்ந்திருக்கிறோம்.

இங்குள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மட்டுமே இளைஞராக உள்ளார். ஆனால், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கே பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே பெரும்பாலான இளைஞர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

விமான போக்குவரத்துக் கட்டணம், ரயில் கட்டணத்துடன் பொருந்திப் போகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆம், வந்தே பாரத் ரயிலுக்கு விதிக்கும் கட்டணம் தான் விமானத்திற்கும் விதிக்கிறார்கள். அந்த அளவிற்கு வந்தே பாரத் ரயிலுக்கு அதிகளவில் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை நிலவுக்கு அனுப்புகிறோம். ஆனால், நம்மால் ஒரு விமானத்தைக் கூட தயாரிக்க முடியவில்லை. அண்டை நாடான சீனா அந்த நாட்டிற்கு தேவையான விமானங்களை அவர்களே தயாரித்துக்கொள்கிறார்கள்.

ஒசூரில் மத்திய அரசு புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும். தயவுசெய்து குஜராத்திற்கு அதை மாற்றி விடாதீர்கள். ஏனென்றால், போதுமான அளவு விமான நிலையங்கள் குஜராத்தில் இருக்கிறது.

தற்போது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இளம் அமைச்சர் கண்டிப்பாக சென்னை விமான நிலையத்தை பார்வையிட வேண்டும். அங்கு ஏராளமான நிலங்கள் இந்திய விமான நிலைய ஆணையம் மூலம் வீணடிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வலதுபக்கம் மற்றும் இடதுபக்கத்தில் ராணுவத்திற்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. பெட்ரோலியம் கண்டெய்னர்கள் அங்கு வைக்கட்டிருக்கின்றன, அவற்றை வேறு இடத்திற்கு நகர்த்திவிடலாம்.

விமான நிலையத்திற்கு வலதுபுறம் குடியிருப்புகளில் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களை வேறு இடத்தில் குடியமர்த்தலாம். இதன்மூலம் 15-க்கும் மேற்பட்ட ஏரோ பிரிட்ஜ்களை அமைப்பதற்கான இடம் கிடைக்கும். எந்த ஒரு மத்திய அமைச்சரும் தமிழகத்தின் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. நீங்களாவது இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கோவை விமான நிலையம் இதுவரை சர்வதேச வரைபடத்தில் இடம்பிடிக்கவில்லை. தூத்துக்குடி விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவனம் மட்டுமே தனியுரிமை கொண்டாடுகிறது. வேறு எந்த விமானங்களும் அங்கே இயக்கப்படவில்லை. ஒரு ப்ரொப்பல்லர் விமான டிக்கெட் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சென்னை – திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்களும் ஒரு நிறுவனம் மட்டுமே தனியுரிமை கொண்டாடுகிறது.

விமான இயக்குனரகத்தில் ஒரு தனிப்பட்ட நிறுவனம் மட்டுமே கோலோச்சுவதை நீங்கள் அனுமதிக்க கூடாது. நீங்கள் தனிப்பட்ட ஒரு நிறுவனம் மட்டுமே இயங்க அனுமதித்தால், விமான நிலைய டிக்கெட் கட்டணம் அதிகரிக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இப்போது நீங்கள் ஒரு போலீஸ் மேனாக இருக்கும் போது உங்களிடம் ஒரு லத்தி இருக்கிறது. அந்த லத்தியைக் கொண்டு ஏர்லைன் விமான சேவை நிறுவனங்கள் தங்களது டிக்கெட் கட்டணத்தை குறைப்பதற்கும், சேவையை முறைப்படுத்துவதற்கும் பயன்படுத்துங்கள். தயவுசெய்து வாடிக்கையாளர்கள் மீது பயன்படுத்தாதீர்கள்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“தேகம் மறைந்தாலும், இசையாய் மலர்வேன்”… சொந்த ஊரில் எஸ்பிபி சிலை திறப்பு!

எஸ்சி எஸ்டி இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர்… ஆகஸ்ட்- 13-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share