எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு!

அரசியல்

தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவதூறு பரப்பியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் இன்று (ஏப்ரல் 18) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவிகிதத்தை பயன்படுத்தவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து தயாநிதி மாறன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமி என் மீது சுமத்தியுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வேண்டுமென்றே எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்  வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்கத் தவறினால், அவர் மீதான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தொடர நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சென்னை எழும்பூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், “75 சதவிகித தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தவில்லை என்று உண்மைக்கு புறம்பாக என் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

இதனையடுத்து 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று நோட்டீஸ் அனுப்பினேன்.

அவர் மன்னிப்பு கேட்காததால், இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். மே 14-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

தொகுதி மேம்பாட்டு நிதியாக சுமார் ரூ.17 கோடி எனக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 95 சதவிகிதத்திற்கும் மேல் மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தியுள்ளேன். என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிறப்பான முறையில் நான் பணியாற்றியிருக்கிறேன். தோல்வியின் விரக்தியில் எடப்பாடி என் மீது அவதூறு பரப்புகிறார்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரூ.13,499 விலையில் ‘விவோ டி3x 5ஜி’: சிறப்பம்சங்கள் என்ன?

பொள்ளாச்சியில் வாக்காளர்களுக்கு பாஜக பணப்பட்டுவாடா: ரூ.81,000 பறிமுதல்!

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *