முதல்வர் ஸ்டாலினின் தயாரும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மனைவியுமான தயாளு அம்மாளின் 90-ஆவது பிறந்தநாள் இன்று (ஜூலை 9) கோபாலபுரம் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதனால் கோபாலபுரம் இல்லம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலைஞர் குடும்பத்தை சேர்ந்த மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். இதனால் கோபாலபுரம் இல்லம் விழாக்கோலமானது.
மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற பின்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் இரண்டு முறை மதுரை சென்றபோது மு.க.அழகிரியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்திக்கவில்லை. அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் மு.க.அழகிரியை மதுரையில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தசூழலில் தயாளு அம்மாள் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் சந்தித்து பேசினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அப்பாவும் பெரியப்பாவும் சந்தித்து பேசிக்கொண்டனர். அவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளவில்லை” என்றவரிடம் மீண்டும் கட்சியில் இணைந்து மு.க.அழகிரி செயல்படுவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “எனக்கு அதுபற்றி தெரியாது” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்