சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்துப் போலீஸார் வாகன சோதனை, மற்றும் ஃபைன் போடுவதையே முக்கிய பணியாக மாற்றிவிட்டார்களா என்ற விமர்சனம் தொடர்ந்து மக்களிடம் எழுந்து வருகிறது.
பொதுமக்களிடம் இப்படி என்றால் அரசியல் கட்சிகள் சட்டம் ஒழுங்கு பற்றி தினம் தோறும் அரசு மீது விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவியேற்றுள்ள டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்தித்து இதுகுறித்து கேள்விகள் கேட்க, டிஜிபி அலுவலகம் சென்றோம்.
மெயின் கேட் நுழைவாயிலில் விசாரணை, அங்கே பதில் சொல்லிவிட்டு அடுத்த கட்டத்தில் ஒரு சோதனை என சிலகட்ட சோதனைகளைக் கடந்து ஏடிஜிபி அலுவலகத்துக்குள் சென்றோம்.
வெளியில் நடக்கும் நிகழ்வுகளை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தனது அறையில் இருந்தபடியே சி.சி.டிவி கேமராவில் கவனித்துக் கொண்டிருந்தவர்… நாம் உள்ளே சென்றதும், ‘எங்கே போறீங்க? எதுக்காக போறீங்க?’ என்றெல்லாம் விசாரிச்சாங்களா?’ என்று கேட்டார். ஆமாம் என சொன்னோம்.
உடனே கேட் இன் சார்ஜ் டி.எஸ்.பி.யை இன்டர்காமில் அழைத்து நேரடியாக வர சொன்னார்.
’பொதுமக்கள் சந்திக்கும் நேரத்தில் அவர்களை அனுமதியுங்கள். முக்கிய குறையுடன் தொலைதூரத்தில் இருந்து வருபவர்களை உள்ளே அனுப்பிவிடுங்கள். சந்தேகப்படும்படியான நபர்களை மட்டும் விசாரித்து அனுப்புங்கள்’ என்று சொல்லி, டிஜிபி ஆபீஸ் கேட் கெடுபிடிகளை தளர்த்தினார்.
இதன் பின் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
நீங்கள் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யாக பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. போலீஸ் துறை எப்படி இருக்கிறது?’
’தமிழக முதல்வர் குற்றங்களை தடுக்க முழு சுதந்திரம் கொடுத்துள்ளார், சென்னை சிட்டி தவிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 11 காவல் சரகத்தில் பத்து சரகத்திற்கு சுமார் 3000 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஆய்வு செய்துள்ளேன். 25 காவல் நிலையங்களுக்கு முன்கூட்டியே சொல்லாமல் திடீர் விசிட் சென்று ஆய்வு செய்துள்ளேன். ஒரு வாரத்திற்கு ஒரு மாவட்டம் சென்று ஆய்வு செய்கிறேன். போலீஸார் சிறப்பாக பணி செய்துவருகிறார்கள். 814 டி. எஸ். பி. கள் எந்தவிதமான ரெக்கமென்டஷனும் இல்லாமல் அவரவர் திறமைக்கு ஏற்றவாறு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் மது ஒழிப்பு போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விவாதங்கள் அதிகமாக நடக்கின்றன. தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் குறைக்க அல்லது தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
கஞ்சா போன்ற போதைப்பொருள்களை தடுக்கும் வகையில் சிறப்பு கவனம் எடுத்து வருகிறோம். ஏட்டு முதல் எஸ். பி. வரையில், டிஐஜி, ஐஜிகள் அன்றாடம் ரிப்போர்ட் கேட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் ஸ்ட்ரெங்த் குறைவாக இருக்கிறது. அதனால் பல வேலைகள் பாதிக்கப்படுவதாக காவல்துறைக்குள்ளேயே பேச்சு உள்ளதே?
இப்போது மதுரைக்கு இரண்டு கம்பெனி போலீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் போலீஸ் ஸ்ட்ரெங்த் இருப்பதை வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் டிஜிபி யும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
மேல் அதிகாரிகள் வாராவாரம் டார்கெட் நிர்ணயித்து கேஸ் போடச் சொல்வதால் ஏற்கனவே செய்த சமூக விரோத செயல்களை கைவிட்டு ஒதுங்கி நிற்பவர்களையும் கூப்பிட்டு வந்து கேஸ் போட்டு கணக்கு காட்டுவதாக குற்றச்சாட்டுகள் வருகிறதே?
அப்படியெல்லாம் டார்கெட் வைத்து வேலை செய்யக்கூடாது. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஒரே டார்கெட். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள் என்று தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல மாநகரங்கள், நகரங்களில் சட்டம் ஒழுங்கு போலீஸார் மற்றும் போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் டார்கெட் விதிக்கப்பட்டுள்ளதா..?
ரேஸ் டிரைவ், ஓவர் ஸ்பீடு, வித்தவுட் டாக்குமென்ட்ஸ், குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு போடுங்கள், பேமிலியாக போகிறவர்களை நிறுத்தி தொல்லை செய்யாதீர்கள் என்றுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் நீங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பற்றி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். ரவுடிகள் மீதான நடவடிக்கை எப்படி உள்ளது?
ரவுடிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தவறு செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்
என்று பதிலளித்தார் ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வணங்காமுடி
அரசியல் செலவுக்கு சினிமாவில்தான் சம்பாதிப்பேன்… பொதுக்குழுவில் கமல்!