குஜராத் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலமான குஜராத் மாநிலத்தின் 182 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2023 பிப்ரவரி 18 ஆம் தேதி நிறைவடையவுள்ளது. குஜராத்தில் 4 கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக இருக்கின்றனர்.
குஜராத், இமாச்சல பிரதேசம் என இரண்டு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ஆனால் கடந்த 14 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை மட்டும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. பிரதமரின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்காததால் எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை வைத்தன. இலவசங்களை அறிவிக்க தேர்தல் தாமதமாக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்தன.
ஆனால் இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது.
தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், குஜராத் சட்டமன்ற தேர்தலின் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இன்று(நவம்பர் 3) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்தார்.
அதன்படி குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 8 ஆம் தேதி நடக்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
182 தொகுதிகள் கொண்ட குஜராத் தேர்தலுக்காக 51,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குச்சாவடிகள் அனைத்து தரைதளத்திலேயே அமைக்கப்படும். குஜராத்தில் புதிதாக 4.6 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
கலை.ரா
பிரபல ஜவுளிக்கடைகளில் 2 ஆவது நாளாக ஐடி ரெய்டு!
திடீர் பயணமாக டெல்லி விரைந்த ஆளுநர்!