வைஃபை ஆன் செய்ததும் நாமக்கல்லில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட அதிமுக ஐடி விங் பாசறைக் கூட்ட போட்டோக்களும், வீடியோக்களும் வந்து விழுந்தன.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாட்டில் கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அமித் ஷா கூறியதற்கு உடனடியாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘நாங்கள் கதவை சாத்தி பெரிய பூட்டுபோட்டுவிடோம்’ என்று சூடாக பதிலளித்தார். ஆனால் அக்கட்சியின் பொதுச் செயலாளரோ அமித் ஷாவின் பேட்டியை பாக்கல என்று பதில் சொல்லி நழுவினார்.
இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம், ’என்னண்ணே… ஒரு பக்கம் பிஜேபியில இருந்து அழுத்தம் கொடுத்துக்கிட்டிருக்கறதா சொல்றாங்க. இன்னொரு பக்கம் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்துல போட்டியிடுவேனு சொல்றாரு. இரட்டை இலை முடங்கவும் வாய்ப்பிருக்குனு சொல்றாரு. ஒண்ணுமே புரியலையே… டெல்லியோட சேர்ந்துக்கிட்டு பன்னீர் நம்மளை பழிவாங்க துடிக்கிறாரு… இரட்டை இலைக்கு ஏதும் ஆயிடுமோ?’ என்று சந்தேகத்தோடும் சலனத்தோடும் கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது. பயப்படாதீங்க. இரட்டை இலை சின்னத்தை நாம கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி வாங்கியிருக்கோம். தேர்தல் ஆணையமும் பொதுக்குழு முடிவை அங்கீகரிச்சாச்சு. அந்த சிவில் கேசை வச்சி மிரட்ட முடியாது. இரட்டை இலைக்கு எந்த ஆபத்தும் வராது’ என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் டெல்லி பாஜக தலைமை தரப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் பாஜக கொடுத்து வரும் அழுத்தம். ஐந்து மாதங்களுக்கு முன்பு யாரெல்லாம் எடப்பாடியிடம் பாஜக கூட்டணி வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தார்களோ, அவர்கள் மூலமாகவே இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கலாம் என்று எடப்பாடியிடம் சொல்ல வைத்து வருகிறது பாஜக.
ஏனென்றால் பாஜகவின் தேசிய தலைமை நடத்திய ஆய்வொன்றில் வரும் மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இத்தனை சீட்டுகள் பிடித்தால்தான் ஆட்சி அமைக்க எளிதாக இருக்கும் என்று தெரியவந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எட்டு சீட்டுகள் வேண்டும் என்பதுதான் டார்கெட்.
அந்த 8 இடங்களையும் இப்போதைய அதிமுக அல்லாத கூட்டணி மூலம் பெற முடியாது என்று தேசிய பாஜக தலைமை உறுதியாக நம்புகிறது. அதனால்தான் மீண்டும் தேஜகூவுக்கு வாருங்கள் என்று எடப்பாடிக்கு பல்வேறு வகைகளிலும் டெல்லியின் அழுத்தம் அதிகமாகியிருக்கிறது.
இந்த அரசியல் சூழலில்தான் இன்று (பிப்ரவரி 8) நாமக்கல்லில் நடந்த அதிமுக ஐடி விங் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு’ என்ற கருத்தை சொல்லியிருக்கிறார்.
அவர் பேசுகையில், ‘தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்திலே ஒலிப்பது நமது எம்பிக்களின் கடமை. மக்கள் எந்த நோக்கத்துக்காக நம்மைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டியது நமது கட்சியின் கடமை.
இன்று தேசிய கட்சிகளோடு கூட்டணி என்று வைத்துவிட்டால், அவர்களின் பார்வை தேசிய அளவிலேயே செல்கிறது. நம்முடைய மாநில பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பது கிடையாது. அதனால் பாதிக்கப்படுவது நாம். அதனால்தான் நாம் பிரிந்து வந்தோம். ஆகவேதான் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நிதியை கொண்டுவர… வெள்ளம், மழை, வறட்சி போன்றவற்றின் போது தமிழ்நாட்டு மக்களின் துன்பங்களை யார் நிவர்த்தி செய்வார்களோ மத்தியில் அவர்களுக்கு பிரச்சினையின் அடிப்படையில் ஆதரவு கொடுப்போம்’ என்று பேசியிருக்கிறார் எடப்பாடி.
பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு கொடுப்போம் என்று எடப்பாடி சொன்னது பாஜகவுக்கான தெளிவான மெசேஜ் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். ‘இப்போது ஓபிஎஸ்சை நம்பி அதிமுகவை அச்சுறுத்த வேண்டாம். தேர்தல் முடிவுக்குப் பின் பிரச்சினைகளின் அடிப்படையில் பாஜகவை ஆதரிப்போம்’ என்பதுதான் எடப்பாடியின் மெசேஜாக இருக்கிறது.
ஏன் பாஜகவுக்கான மெசேஜாக இதை பார்க்க வேண்டும் என்றால், அதே மேடையில் எடப்பாடி பழனிசாமி இந்தியா கூட்டணியை கிண்டல் செய்திருக்கிறார். இந்தியா கூட்டணி என்ற காரில் ஒவ்வொரு சக்கரமாய் கழன்று ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் எடப்பாடி. மேலும் ஸ்டாலினை ராசியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளார். தொடர்ந்து அவர் இந்தியா கூட்டணிக்கு எதிராகவே பேசி வருகிறார். ஆனால் பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்போம் என்று எடப்பாடி இன்று சொல்லியிருப்பது அதிமுகவின் தேர்தலுக்குப் பிறகான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
ரூ.8.65 லட்சம் கோடி முதலீடு… 30 லட்சம் வேலைவாய்ப்பு: அரசு!
அச்சாரம் போட்ட கலைஞர்… அப்டேட் செய்யும் ஸ்டாலின்… தொடங்கியது கணித் தமிழ் மாநாடு!