மற்றுமொரு தலித் இளைஞர் சங்கர், ஆணவக்கொலைக்குப் பலி. சாதீய வெறுப்புக் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது, சமூக நீதி மற்றும் சாதிய ஒழிப்பு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் விடுக்கப்பட்ட சவால்.
கவுண்டர், முக்குலத்தோர், வன்னியர்களது ஆணவக்கொலைகளை முதலில் அச்சாதியினரின் பெயர் சொல்லி அம்பலப்படுத்த வேண்டும். இடைசாதியினர், ஆண்ட சாதியினர் என்று பூசு மொழுகாமல் ஊடகங்கள், அரசு இயந்திரம், நீதித்துறை, சாதி ஒழிப்பு இயக்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்கள் இந்த மூன்று சாதியினருடைய தலித் மற்றும் இதர கீழ்நிலை சாதியினர் மீதான வெறுப்பினை வெளிச்சத்துக்கு விவாதப் பொருளாகக் கொண்டு வர வேண்டும்.
இப்படிப்பட்ட தலித் வெறுப்பு நிலை ஏற்படக் காரணமாக இருந்ததில் தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சி புரிந்து வரும் இரண்டு திராவிட அரசியல் கட்சிகளுக்கு இருக்கிற பொறுப்பினை தட்டிக்கழிக்க முடியாது. ஏற்கனவே இருக்கின்ற சட்டப்பிரிவுகளின் படி ஏன் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு நமக்கு பதில் தெரியும் என்பதே சமூக நீதி சரித்திரம் படைத்த தமிழகத்தின் வெட்கக்கேடான நிலை.
அகமண முறையை நிராகரித்து புறமண முறையை பின்பற்றுவது சாதி ஒழிப்பில் நமக்குக் கிடைத்த மிக வலிமையான ‘ஒரு’ முயற்சியும் உத்தியுமாகும். பெரியார் இதைத் தொடர்ந்து வலியுறுத்தினார். பின்னால் இவை சுயமரியாதைத் திருமணங்களாக மழுங்கியது. புறமண முறைத் திருமணங்கள் எல்லாம் சுயமரியாதைத் திருமணங்கள். ஆனால், சுயமரியாதைத் திருமணங்கள் எல்லாம் புறமண முறைத் திருமணங்கள் அல்ல.
இம்மூன்று சாதியனர் தவிர மற்றவர்களும் அகமண முறையைத் தான் விரும்புகின்றனர் என்பது நான் பார்த்த வரையில் உண்மை. மற்ற சாதியக் குழுக்களில் இது போன்று ஆணவக்கொலைகள் இந்த அளவு வெளிவராததற்கு காரணம் மூன்று என நான் கருதுகிறேன்: அ) நடை முறையில் உள்ள வெற்றிகரமான “பிராமண முறை”: மேல்சாதிகளில் உள்ள இளம் தலைமுறையினர் பிராமணர்களைப் போல் ஏற்கனவே சாதிப்பற்றோடு இருப்பதால், பாதுகாப்பாக தங்களுக்குள்ளே காதலித்துக் கொள்வது ஒரு காரணமாக இருக்கலாம். ஆ) புறமண முறைத் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டு, இத்தம்பதிகள் நிராதரவாக கொஞ்சம் கொஞ்சமாக நித்தம் கொல்லப்படுகின்றனர். இ) ஆணவக்கொலைகள் சாமர்த்தியமாக மூடி மறைக்கப்படுகின்றன என்றும் பொருள் கொள்ளலாம். மேல் சாதி மானுடவியல் ஆய்வாளர்கள் தலித்துகளைப் பற்றி ஆய்வு செய்வதைப்பற்றி கொஞ்ச நாள் நிறுத்தி வைத்துவிட்டு – அதற்கான சந்தைத் தர்க்கம் இருந்த போதிலும் – தங்கள் வீடுகளிலும் சுற்றத்திலும் நடப்பதை நியாயமாக எழுத முற்படுவார்களேயானால், பிராமண /’மேல்’/தலித்துக்களுக்கெதிரான சாதிய வன்முறையின் இடியாப்பச்சிக்கல் குறித்து பெருத்த விழிப்புனர்வு ஏற்படும்.
நேற்று நடந்த படுகொலைக்காக ரத்தம் கொப்பளிக்கும் பலருக்கும் ஒரே ஒரு தாழ்மையான கேள்வி: அகமண முறைக்கெதிராக நீங்கள் ஏதாவது துரும்பைக் கிள்ளிப் போட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் மிக்க நல்லது. தொடர்ந்து செய்யுங்கள். துரும்பு என்று நான் இங்கு குறிப்பிடுவது பொது மேடையில் பேசுவது, பத்தி எழுதுவது, செய்தி தயாரிப்பது, ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பது அல்ல. உங்களது வீட்டில், குடும்பத்தில், உறவினரின் வட்டாரத்தில், நண்பர்களின் வட்டாரத்தில் அகமணமுறை ஜே ஜே வென்று கொண்டாடப்படியபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஒன்றும் செய்யவில்லையெனில், உங்களைப்போன்றோரின் நீண்ட நெடிய சாதிய சித்தாந்த வன்முறையின் ஒரு கோரப்பல் தான் நேற்று நடந்த படுகொலை. அரசு தீர்மானித்தால் (ஆனால், க்காது) கொலையாளிகளைத் தண்டிக்க முடியும். அப்படித் தண்டித்தாலும் தினசரி வாழ்க்கைகளில் அகமண முறையை தண்டிக்க முடியாது (கண்டிக்கப்பட வேண்டும் என்பது என்னைப் போன்றோரின் ‘கோர விருப்பமாக’ இருந்தாலும்).
இறுதியாக, தமிழகத்தில் இது தேர்தல் நேரம். அனைத்து கட்சிகளும் – குறிப்பாக மாறி மாறி ஆண்டு வருகிற திராவிடக்கட்சிகள், புறமண முறையை ஆதரிக்கும் இளம் தலைமுறையினருக்கு ஏதுவாக ஒரு பாதுகாப்பினை அளிக்க சட்டம், காவல் துறையினர் மற்றும் சமூக நலத்துறையின் ஆதரவினை ஏற்படுத்த வகை செய்ய வேண்டும். வெறும் கண்டன அறிக்கைகள் எதையும் வழிக்க உதவாது.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[முரளி சண்முகவேலன் முழுமையான கட்டுரைக்கு]
https://minnambalam.com/political-news/special-column-murali-shanmugavelan/