தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்கள் குறித்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள பல்வேறு அம்சங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 341வது பிரிவின் கீழ், சாதிகள், இனங்கள் அல்லது குழுக்களை, பட்டியல் சாதிகளில் சேர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை குடியரசுத் தலைவர் வழங்க முடியும்.
1950ஆம் ஆண்டில், இந்த விதிகளைப் பயன்படுத்தி, ’தீண்டத்தகாதவர்கள்’ என்று கருதப்பட்ட மற்றும் ’புறக்கணிக்கப்பட்ட’ இந்துக்கள் மட்டுமே பட்டியல் சாதிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இன்று தலித்துகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அதனை தொடர்ந்து சீக்கிய சமூகத்தில் எழுந்த கோரிக்கையின்படி, 1956ஆம் ஆண்டில் பட்டியல் சாதிகளில் தலித் சீக்கியர்களும் சேர்க்கப்பட்டனர்.1990ல் மத்தியில் வி.பி. சிங் அரசு ஆட்சிக்கு வந்தபோது, தலித் பௌத்தர்களும் அதில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் “இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தையும் பின்பற்றுபவர்கள், பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட மாட்டார்கள்” என்று திருத்தப்பட்ட உத்தரவில் அப்போதைய மத்திய அரசு கூறியது.
இந்தியாவில் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
ஆனால் மேற்கூறப்பட்ட உத்தரவு காரணமாக தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்து, சீக்கிய மற்றும் பௌத்த தலித்துகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் பலன்களை அவர்கள் இழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் முஸ்லிம் மற்றும் கிறித்துவ மதத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்று பல அமைப்புகள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றன.

அவற்றில் ஒன்றான தலித் கிறிஸ்தவர்கள் தேசிய கவுன்சில், கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட முடிவை எதிர்த்து ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனு கடந்த 2020 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில், அக்டோபர் 11ஆம் தேதி இதுகுறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு நீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்தது.
கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் : இந்திய மதங்கள் அல்ல!
அதன்படி பட்டியலிலிருந்து தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களை விலக்குவதை நியாயப்படுத்தும் வகையில் கடந்த மாதம் மத்திய பாஜக அரசு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மூலம் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதன் பிரமாணப் பத்திரத்தில், ”இந்து, சீக்கியம், பௌத்தம் மற்றும் பிற மதங்களைப் பின்பற்றும் அட்டவணை சாதியினருக்கு இடையே உள்ள நியாயப்படுத்த கூடிய வேறுபாடுகள் உள்ளன.
கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவை இந்திய மதங்கள் அல்ல. இந்தியாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மக்களை உருவாக்குவதற்கு வெளிநாட்டு பங்களிப்புகள் இருந்தன.
பௌத்த மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினர் 1956 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரின் அழைப்பின் பேரில் தானாக முன்வந்து புத்த மதத்தைத் தழுவினர். அப்படி மதம் மாறியவர்களின் உண்மையான சாதிகள்/சமூகம் தெளிவாகத் தீர்மானிக்கப்படும்.
பல நூற்றாண்டுகளாக மதமாற்றம் நடைபெற்று வருவதால், பிற காரணிகளால் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதைச் சொல்ல முடியாது.
சட்டப்பிரிவு 14 வகுப்புச் சட்டத்தைத் தடைசெய்கிறது, ஆனால் வகைப்பாட்டைத் தடைசெய்யவில்லை.
பட்டியலிடப்பட்ட சாதிகளை அடையாளம் காண்பது என்பது ஒரு குறிப்பிட்ட சமூக இழிவை மையமாகக் கொண்டது. அதன் நோக்கம் அவர்களுக்கு அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் வழங்குவதே ஆகும்.

பிரமாண பத்திரத்தின் முரண்பாடுகள்!
மத்திய அரசு அளித்துள்ள பிரமாணப் பத்திரம், பத்தி 31ல், “சில இந்து சாதிகளில் நிலவும் தீண்டாமை அடக்குமுறை காரணமாக பொருளாதார மற்றும் சமூகப் பின்தங்கிய நிலைக்கு அந்த சமூகத்தில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் சமுதாயத்தில் தீண்டாமை இல்லாத நிலையே பரவலாக உள்ளது. இதனால் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.” என்று கூறியுள்ளது.
ஆனால் அடுத்த வாக்கியத்தில், “நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்து சமுதாயத்தில் இருந்த அடக்குமுறைச் சூழல், கிறிஸ்துவர் அல்லது இஸ்லாமிய சமுதாயத்திலும் இருந்தது என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கட்டத்தில், “ஆவணப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் துல்லியமான அங்கீகரிக்கப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளது.
எனினும் அடுத்த பக்கத்தில், “கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய சமூகத்தின் உறுப்பினர்கள் தீண்டாமை அல்லது ஒடுக்குமுறையை ஒருபோதும் எதிர்கொள்ளவில்லை என்பதை தெளிவாக நிறுவிய வரலாற்று தரவுகளின் அடிப்படையில் பட்டியலிலிருந்து தலித் கிறிஸ்தவம் மற்றும் தலித் முஸ்லிம்கள் விலக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

மதம் மாறினாலும் தொடரும் அடக்குமுறை!
ஆனால் கள நிலவரம் என்பது மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்துக்கு மாறாக உள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள தலித் முஸ்லிம்களில் 47 சதவிகிதம் பேர் இன்னும் வறுமை கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்காக சதீஷ் தேஷ்பாண்டே மற்றும் கீதிகா பாப்னா ஆகியோர் தயாரித்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த அறிக்கை, 2004-05 ஆம் ஆண்டின் தரவுகளை மேற்கோள்காட்டுகிறது. கிராமப்புறங்களில் 40 சதவிகித தலித் முஸ்லிம்களும், 30 சதவிகித தலித் கிறிஸ்தவர்களும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர்.
பொருளாதார மட்டத்தில் பின்தங்கிய நிலை இருப்பதோடு கூடவே, கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறினாலும், அவர்களுக்கு எதிரான சமூக பாகுபாடும் தொடர்கிறது.
தனி தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கல்லறைகளுக்கு செல்ல அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். நீண்ட காலமாக இதை மறுத்து வந்த கத்தோலிக்க திருச்சபை, தலித் கிறிஸ்தவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதை இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.

3 பேர் கொண்ட ஆணையம்!
இதற்கிடையே கடந்த மாதம் 8ம் தேதி தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லிம்கள் குறித்து விளக்கமான அறிக்கை தாக்கல் செய்ய 3 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்தது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் இந்த ஆணையத்தின் தலைவராக இருப்பார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதவ் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவீந்தர் குமார் ஆகியோர் ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்களாவர்.
இந்த ஆணையம் தலித் கிறிஸ்தவர்களையும், தலித் முஸ்லீம்களையும் பட்டியல் சாதியினர்(எஸ்.சி) சேர்க்கலாமா என்று ஆய்வு செய்யும்.
இந்து, சீக்கியம் மற்றும் பௌத்தத்தை பின்பற்றும் தலித்துகளுக்கும், இஸ்லாம், கிறிஸ்தவத்தை பின்பற்றும் தலித்துகளுக்கும் இடையே சரியான வேறுபாடு உள்ளதா என்பதை ஆணையம் அடுத்த 2 ஆண்டுகளில் கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தலித் சிறுமிகள் கொடூரக் கொலை: மீண்டும் சர்ச்சையில் லக்கிம்பூர் கேரி
T20 WorldCup: இறுதிகட்டத்தில் உலகக்கோப்பை… மழை வந்தால் வெற்றி யாருக்கு?