”தலித் முதல்வராக முடியாது” : திருமாவளவன் சொன்னது சரிதான்… ஆனா இது பிடிக்கல… சீமான் பேட்டி!

Published On:

| By christopher

"Dalit can't be Chief Minister in tamilnadu " : semman welcomed Thirumavalavan speech but..

எந்த சூழ்நிலையிலிலும் ஒரு தலித் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பட்டியல் சமூக பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம், மாநிலங்களுக்கு இருக்கிறது என்றும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

இதனை தமிழத்தின் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்று கருத்து தெரிவித்தன.

ஆனால் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனையடுத்து பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் வகையில் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து விசிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!

அப்போது திருமாவளவன் பேசுகையில், “உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மாநில அரசுகளுக்கான உள் ஒதுக்கீடு உரிமையும், கிரிமிலேயர் ஆகிய இரண்டும்தான் இங்கே மிக முக்கியமான பிரச்சனைக்குரியவை என்பதை நாம் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் ஆந்திராவில் வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு பட்டியில் சமூக இட ஒதுக்கீட்டில் சப் கோட்டா எனப்படும் முன்னுரிமை மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஆந்திராவில் வழங்கப்படுவது sub class எனப்படும் பட்டியல் சமூகத்தை தனி அங்கமாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என சொல்வது எஸ்டி மக்களுக்காக இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை நடைமுறை செய்வதற்கு வன்னியர்கள் எந்த அளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதற்கான போதிய தரவுகள் இல்லை.

பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிப்பதையும், வருமான வரம்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  ஒன்றிய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். கிரீமிலேயர் குறித்து 5 நீதிபதிகள் சொன்ன கருத்துக்களை அந்த தீர்ப்பிலிருந்து நீக்குவதற்கு ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு பட்டியல் சமூகத்தின் இட ஒதுக்கீடு உரிமையை நசுக்கும் வகையில் உள்ளது.  பட்டியல் சமூகத்தின் இட ஒதுக்கீட்டு அளவை மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்குவதே நியாயமாக இருக்கும்” என்றார்.

தலித் முதல்வராக முடியாது!

மேலும் அவர், “எந்த சூழ்நிலையிலிலும்  எந்த காலத்திலும் ஒரு தலித் ஒரு மாநிலத்தின் முதல்வராக ஆக முடியாது. அதில் மாயாவதி விதிவிலக்கு. திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் திமுக அரசு என்பது நிலையானது அல்ல, மாநில அரசுதான் நிலையானது” என்று திருமாவளவன் பேசினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று பேச்சு தீவிரமாக எழுந்து வரும் நிலையில்  திருமாவளவனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தற்போது சமூக வலைதளங்களிலும் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்று பேசியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் பொதுச் செயலாளர் தடா சந்திரசேகரனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது.

திமுக அரசு மீது நம்பிக்கை உள்ளது என்ற கருத்தை எதிர்க்கிறேன்!

அதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசுகையில், “மாநில முதல்வராக இனி தலித் ஒருவர் வர முடியாத சூழ்நிலை உள்ளதாக திருமாவளவன் கூறியதை நானும் ஏற்கிறேன். அதேசமயம் திமுக அரசு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறியதை நான் எதிர்க்கிறேன்.

துணை முதல்வராக ஆதிதமிழ் குடியை கொண்டு வரமுடியாதா? கல்வி அமைச்சராக ஆதிதிராவிடரை நியமித்தால் படிப்பு ஏறாதா? ஆதிதிராவிடர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறையை தவிர வேறெந்தத் துறையை கொடுத்துள்ளனர்? உங்க வீட்டுக்குள் இருந்துதான் துணை முதல்வர் வர வேண்டுமா? நாட்டுக்குள்ளே இருந்து வேறு யாரும் வரக்கூடாதா?

ஒரு தடவை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். ஆதிதமிழ் குடிகளை மதிப்பதற்குப் பதிலாக மிதிக்கும் கொடுமை இப்போது நடந்து வருகிறது. இதை சட்டம், திட்டத்தால் மாற்ற முடியாது. உளவியல் ரீதியாக மாற வேண்டும்,” என்று சீமான் ஆவேசமாக கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஒரே நாளில் எஸ்.பி.எம் தந்த இரண்டு படங்கள்!

மாணவர்களுக்கு சுமை… பாடப்புத்தகங்கள் விலையேற்றத்திற்கு எடப்பாடி கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel