ஆயிரம் ரூபாயை கடந்த சிலிண்டர் விலை!

Published On:

| By admin

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்து ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எரிபொருட்களின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலையைப் பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை கூட விலை ஏற்றம் செய்யப்படுகிறது. கடந்த மே 1ஆம் தேதி வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.102 அதிகரித்து ரூ.2,508க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சூழலில் இன்று (மே 7) ஒரே நாளில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 2021 ஜனவரி மாதம் 710 ரூபாயாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை இருந்தது. இதையடுத்து படிப்படியாக விலை உயர்த்தப்பட்டுக் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி நிலவரப்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலை 915 ரூபாயாக இருந்தது.

இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் மீண்டும் 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ஒன்று 965 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த சூழலில் இன்று மீண்டும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு, ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 1,015ஆக உள்ளது. ஏற்கனவே விலைவாசி அதிகமாக உள்ள நிலையில் சிலிண்டர் விலையும் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று விலை உயர்ந்து கொண்டே சென்றால் மீண்டும் அடுப்பூதும் நிலை தான் ஏற்படும் என இல்லத்தரசிகள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share