தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி. யாக அங்கீகரிக்க கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அவருடைய மூத்த மகனான தேனி மக்களவை எம்.பி. ரவீந்திரநாத் இளைய மகன் ஜெயபிரதீப் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி எம்.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி என அங்கீகரிக்க கூடாது என மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதம் தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் ரவீந்திரநாத் அதிமுக எம்.பியாக தொடர்கிறார்.
இந்தநிலையில், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள்காட்டியும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை காட்டியும் தேனி எம்.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி என அங்கீகரிக்க கூடாது என்று மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவை சந்தித்து சி.வி. சண்முகம் இன்று மனுகொடுத்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தேனி தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மோனிஷா