லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து கொண்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்குள் அனுமதிக்கக்கோரி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், திருவள்ளூரில் உள்ள வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக தகுதிச் சான்றிதழ் வழங்கியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற சென்னை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை அடையாறில் உள்ள சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சி.வி.சண்முகம் வீட்டிற்குள் செல்ல முயன்றார்.
ஆனால் அவரை அங்கிருந்த காவல்துறையினர் தடுத்தனர். லஞ்ச ஒழிப்பு சோதனை நடக்கும்போது அனுமதியில்லாமல் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று போலீசார் கூறினர். இதனால் சி.வி.சண்முகம் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து விஜயபாஸ்கர் வீட்டினுள் செல்ல சி.வி.சண்முகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த சோதனை நடக்கிறது.
ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தி எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. எனவே மீண்டும் ஒரு வழக்கினை போட்டு சோதனை என்ற பெயரில் இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி அழிக்கலாம் என்று நினைக்கிறது.
திமுக அரசு தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திறனில்லாமல் இருக்கிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு, முதியோர்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட திட்டங்களை இந்த அரசு முடக்கியிருக்கிறது.
பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு கொடுத்த சலுகைகளை தர மறுக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சொத்து வரி, பால், விலைவாசி உயர்ந்திருக்கிறது.
அதையெல்லாம் தாண்டி மின்கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியிருக்கிறார்கள்” என்று திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
கலை.ரா
தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை: சி.வி.சண்முகம்