அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாட்டார்மங்கலம் பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் , முதல்வர் ஸ்டாலின் குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியிருந்தார்.
12 மணிநேர வேலை செய்ய அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதா, வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது, கஞ்சா புழக்கம், மது விற்பனை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் சி.வி சண்முகம் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் சிவி சண்முகத்துக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் நான்கு வழக்குகள் தொடரப்பட்டன.
இதை எதிர்த்து சி.வி சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில், மத்திய அரசை கண்டு தமிழக அரசு பயப்படுகிறது என்று பேசியதாக தொடரப்பட்ட வழக்கையும், கஞ்சா முதலமைச்சர் என்று கூறியதாக தொடரப்பட்ட வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
அதே சமயம் தொழிலாளர்கள் நல சட்டம் குறித்தும், மோசடி அரசு என்று பேசியதற்காகவும் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்யவில்லை.
இதை எதிர்த்து சிவி சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்த நிலையில், அவதூறு வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
அதோடு தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “அவதூறு வழக்குகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று(செப்டம்பர் 23) விசாரணைக்கு வந்தபோது, “சிவி சண்முகம் பேசிய சில பகுதிகளை படித்துப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மக்கள் பிரதிநிதி இப்படி எல்லாம் பேசலாமா?
இவ்வளவு மோசமான பேச்சுக்காக அவர் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது?
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் செய்த தவறை உணராவிடில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரியா
லட்டுவில் கலப்படம்: திருப்பதி கோயிலில் மகா சாந்தி யாகம்!
“சிறார் ஆபாசப்படம் பார்ப்பது குற்றம்”: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!