தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, ஊழல் பிரச்சனைகளை திமுக அரசு தடுக்க தவறியதால் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (மே 29) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் பேசும்போது, “தமிழகத்தில் ரவுடிசம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகளால் தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கஞ்சா, போதை சாக்லெட்டுகள் விற்கப்படுகிறது. சாராய வியாபாரி மரூர் ராஜாவுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நெருக்கமாக உள்ளார்.
காவல்துறையை கையாள தெரியாதவராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். தமிழக அரசின் கலால் துறைக்கு வரவேண்டிய ரூ.10 ஆயிரம் கோடி செந்தில் பாலாஜி மூலமாக முதல்வரின் குடும்பத்திற்கு செல்கிறது. தமிழகத்தில் லைசன்ஸ் இல்லாமல் இயங்கும் பார்களில் ஊழல் நடைபெறுவது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநர் ரவியிடம் புகார் கொடுத்தோம். அதன்பிறகு தான் லைசன்ஸ் இல்லாமல் இயங்கி வரும் பார்கள் சீல் வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தாம்பரத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, மதுரவாயலில் முன்னாள் அமைச்சர் பென்ஜமின், நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செல்வம்
டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ருதுராஜூக்கு பதிலாக ஜெய்ஷ்வால்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு அடுத்த ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்!