இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், மனுதாரர், எதிர்மனுதாரர்கள் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று (டிசம்பர் 23) தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “அதிமுக கட்சி சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்டது தொடர்பாகவும், உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 – 2022ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன்.
உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. என் மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்” என்று கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், டிசம்பர் 19-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும், டிசம்பர் 23-ஆம் தேதி டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுதாரர், எதிர்தரப்பினர் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதன்படி, அதிமுக தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று ஆஜரானார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம்,, “அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட சூர்யமூர்த்தி என்ற நபர் கொடுத்த மனுவை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மனுதாரர், எதிர்மனுதாரர்கள் தேர்தல் ஆணையத்தில் இன்று ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தேர்தல் ஆணையத்தில் இன்று விசாரணை எதுவும் நடைபெறவில்லை. மனுதாரர், எதிர் மனுதாரர்கள் தங்களுடைய பதிலை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் ஜனவரி 13-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு இந்த வழக்கை விசாரிப்பதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினராக இல்லை. 2021 சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி சார்பில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்.
உட்கட்சி தொடர்பான விஷயங்களை தலையிட அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. எனவே, இந்த மனு ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் நாங்கள் ஏற்கனவே கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி பதில் மனுத்தாக்கல் செய்திருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பது தான் ஒரே அதிமுக. வேறு எந்த அதிமுகவும் இல்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் அபத்த வாதம்!
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம்!