தேர்தல் ஆணையம் குமாஸ்தா வேலையை மட்டுமே பார்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். CV Shanmugam attacks Election Commission
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 12) தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சூர்யமூர்த்தி என்பவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கொண்டுவரப்பட்ட கட்சியின் சட்டத்திருத்தங்கள், பொறுப்பாளர்களின் மாற்றங்கள் ஆகியவை செல்லாது என்று கோரி நிவாரணம் கேட்டார்.
இதில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என 23.12.2024 அன்று தெரிவித்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் இரண்டு தவறுகளை செய்தது.
வழக்கு போட்டது சூர்யமூர்த்தி என்ற தனிநபர். தேர்தல் ஆணையம் என்ன செய்தது என்றால், 23.12.2024 அன்று எங்களுடைய வாதத்தை கேட்டுவிட்டு பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை, நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விசாரிக்க போகிறோம் என்று கூறியது.
சட்டம் என்ன சொல்கிறது? V Shanmugam attacks Election Commission
வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்றமே தேர்தல் ஆணையத்தை கண்டித்தது. நாங்கள் எப்போது, எந்த இடத்தில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம் என்று கேட்டது.
நாங்கள் முடிவெடுக்கிறோம் என்று நீங்கள் சொன்னதை பதிவு செய்து உத்தரவுபோட்டோம் என்று நீதிமன்றம் கூறியது. மற்ற 5 மனுக்கள் மீது எந்த உத்தரவும் இல்லை.
ஆனால், தேர்தல் ஆணையம் 30-ஆம் தேதிக்குள் உங்களுடைய கருத்துகளை சொல்லுங்கள், 13-ஆம் தேதி தேதிக்குள் பதில் மனு போடுங்கள் என்று தனது அதிகார வரம்பை மீறி, இல்லாத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக சொல்லி விசாரித்ததை எதிர்த்துதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
அதில்,
1.நீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகிறது,
2.இந்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. விசாரிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லியிருந்தோம்.
இதை ஆரம்பக்கட்டத்தில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 29-ஏ, Para 15 ஆகிய இரண்டு அதிகாரத்தின்படிதான் ஒரு கட்சி விவகாரத்தில் தலையிட்டு முடிவுகளை சொல்லமுடியும்.
சட்டப்பிரிவு 29-ஏ, ஒரு கட்சியை பதிவு செய்ய வேண்டுமென்றால், அந்த கட்சியின் சட்டத்திட்டங்களை எல்லாம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில் கட்சியின் சட்டத்திட்டங்கள் எல்லாம் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை பார்த்து முடிவெடுத்து சொல்லும் அதிகாரம் இருக்கிறது. அதாவது எந்த விதியின் படி பதிவு செய்யலாம் என்று சட்டப்பிரிவு 29-ஏ விதி சொல்கிறது.
Para 15 என்ன சொல்கிறது என்றால், தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு இயக்கம், கட்சியில் மாற்றங்கள் (பெயர், சட்டத்திட்டம், விதிகள்) ஏற்பட்டால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கப்பட்ட மாற்றங்களையும் பதிவு செய்ய வேண்டியதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலை. அதாவது குமாஸ்தா வேலை.
அதைதவிர, அந்த மாற்றங்கள் சரியா, தவறா என்று சரிபார்க்க வேண்டிய வேலை தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. அந்த அதிகாரம் எல்லாம் நீதிமன்றத்துக்குதான் இருக்கிறது.
Para 15 சட்டப்படி, நாங்கள்தான் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னால், அதன் மீது தேர்தல் ஆணையம் தனக்கு கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் பிளவுபட்ட குழுக்களை விசாரணை செய்து, எந்த குழு உண்மையானது என்று விசாரணை செய்யும் அதிகாரம் உள்ளது.
இது அதிமுக ஏற்கனவே தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றமே இரண்டு தீர்ப்புகளில் சொல்லியிருக்கிறது. இப்போது நடைபெற்ற வழக்கு விசாரணையிலும் தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது. அதாவது உட்கட்சி விவகாரத்தில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருக்கிறது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு? V Shanmugam attacks Election Commission
ஆனால், எங்களுடைய கோரிக்கை என்ன, கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட, நீக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றுதான் நாங்கள் சொன்னோம்.
தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டு, துரோகிகள் கொடுத்த இந்த மனுவை விசாரிப்பதற்கு முன்பாக தேர்தல் ஆணையத்திற்கு விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறதா என்பதை முடிவு செய்ய வேண்டும். இதுதான் இன்று கொடுக்கப்பட்ட தீர்ப்பு. எங்களது கோரிக்கையே இதுதான். இதைத்தான் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த சி.வி.சண்முகம், “தேர்தல் ஆணையத்தில் மனுக்களை கொடுத்த புகழேந்தி இந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். மற்றவர்களாவது சட்டத்திருத்தங்கள் குறித்து மனுவில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இந்த ரவீந்திரநாத், புகழேந்தி கொடுத்த மனுவை விசாரித்து, என்னுடைய குறைகளை சொல்ல நேரம் கொடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்” என்று விமர்சித்தார்.
“ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்த மூல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறோதோ, அதைத்தான் நாங்கள் செயல்படுத்துவோம் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது.
அதிகாரத்தின்படிதான் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். நாங்கள் கேட்ட நிவாரணத்தை நீதிமன்றம் தெளிவாக தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது என்பதால் நாங்கள் மேல்முறையீட்டுக்கு போகமாட்டோம்” என்று கூறினார். V Shanmugam attacks Election Commission