CV Shanmugam meets Ramadoss for Alliance

கூட்டணிப் பேச்சுவார்த்தை: ராமதாஸை மீண்டும் சந்தித்த சி.வி.சண்முகம்

அரசியல்

CV Shanmugam meets Ramadoss for Alliance

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவில் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளை திமுக தலைமை நேற்று (பிப்ரவரி 24) ஒதுக்கியுள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் நேற்று பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்” என்று தெரிவித்தார்.

அதிமுகவை பொறுத்தவரை பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அந்தவகையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை திண்டிவனம் தைலாபுரத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் நேற்று இரண்டாவது முறையாக நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி ராமதஸை சி.வி.சண்முகம் சந்தித்தார்.

நேற்று நடைபெற்ற சந்திப்பில், கடந்த தேர்தலை போல 7 நாடாளுமன்ற தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

பாமக தரப்பிலோ, 9 நாடாளுமன்ற தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், குறிப்பாக வட மாவட்டங்களில் அதிகப்படியான தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சி.வி.சண்முகத்திடம் ராமதாஸ் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பதாக சி.வி.சண்முகம் கூறியுள்ளார். பாஜக அல்லாத வலுவான கூட்டணி அமைக்க பாமக, தேமுதிக கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டதில் கேரளா முதலிடம்: தமிழ்நாட்டின் இடம் எது?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி

CV Shanmugam meets Ramadoss for Alliance

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *