திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மார்ச் 29) சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்டம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்கு செல்பவர்களையும், புகார் கொடுக்க செல்பவர்களையும் ஏ எஸ் பி பல்வீர்சிங் கொடூரமான முறையில் தாக்கியும் பற்களை உடைத்தும் கொடுமைகள் செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்த நிலையில்… சட்டமன்றத்தில் சஸ்பெண்ட் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர்.
கடந்த பத்து நாட்களாக ஏ எஸ் பி பல்வீர்சிங் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. சோஷியல் மீடியாக்களில் சிலர் வெளியிட்ட வீடியோவும், அதைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் கண்டன அறிக்கைகள் விட்டதால் ஏஎஸ்பிக்கு நெருக்கடிகள் அதிகரித்தது.
இந்த நிலையில் சப் கலெக்டரும் சப் டிவிஷினல் மாஜிஸ்திரேட்டுமான ஷாபிர் ஆலமிடம் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலமும் அதைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய விஷயங்களும் அதிர வைப்பதாக இருக்கின்றன.
அம்பாசமுத்திரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆறு பேர் விசாரணைக்காக சென்றார்கள். விசாரணைக்கு ஆஜராகிவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சுபாஷ், “எனது நான்கு பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் கட்டிங் பிளேடு வைத்து பிடுங்கினார். வேறு யாரும் கை காலை பிடித்துக் கொள்ளவில்லை. அவர் மட்டுமே செய்தார்.
இதை பற்றி வெளியே சொல்லக் கூடாது, பிரச்சினை பண்ணக் கூடாது என்று சிகிச்சைக்காக எனக்கு முப்பதாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதுபோக தேவைப்பட்டால் இன்னும் தருகிறோம் என்று சொன்னார்கள்.
இப்ப எனக்கு போலீஸ் தொந்தரவு பண்ணுவாங்களோனு பயமா இருக்கு. எனக்கு எது நடந்தாலும் போலீஸ்காரங்கதான் பொறுப்பு” என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட இன்னொருவரான வேத நாராயணன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “எஸ்பி கான்ஸ்டபிள் போகன் மற்றும் இன்னொருவர் என்னை இன்று மதியத்துக்கு மேல் அம்பாசமுத்திரம் அழைத்து வந்தார்கள். எனது பற்கள் தானாகவே விழுந்துவிட்டன என்று எழுதித் தருமாறு கேட்டார்கள். நான் சாமர்த்தியமாக எனது வக்கீல் மகாராஜன் மூலமாக பத்திரமாக தப்பித்து வந்துவிட்டேன்” என்று சொல்லியிருக்கிறார்.
இதற்கிடையே விசாரணைக்கு ஆஜரான சூர்யா என்பவர் செய்தியாளர்களிடம், “ நான் காவல்துறை கஸ்டடியில இருக்கேனு யாரோ வதந்தி கெளப்பினாங்க. நான் கீழே விழுந்துதான் என் பல் உடைஞ்சுது” என்று சொன்னார்.
உடனே, “போலீஸ் மிரட்டுச்சா?” என்று செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி கேட்க, அந்த சூர்யா மெடிக்கல் செக்கப்புக்காக தமிழ்நாடு அரசின் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.
அப்போது செய்தியாளர்கள், “சூரியா போன்ல பேசும்போது கூட போலீஸ் தாக்குனதாலதான் என் பல் உடைஞ்சதுனு சொன்னீங்க?” என்று கேள்விகளால் துளைத்தனர்.
“முதலமைச்சரே அந்த அதிகாரிய சஸ்பெண்ட் பண்ணியிருக்காரு. நீங்க பயப்படாம சொல்லுங்க” என்று கேட்க அந்த வாகனம் வேக வேகமாக கிளம்பியது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் தினகரன் ராஜாமணி இந்த வாக்குமூலங்களை உடனுக்குடன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வீடியோவாக பகிர்ந்திருக்கிறார்.
நெல்லை பத்திரிகையாளர்கள், “அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் கஸ்டடி மரணத்துக்கு சற்றும் குறையாத சம்பவமாக இருக்கிறது இது. ஏஎஸ்பியை காப்பாற்றுவதற்கு போலீசாரே கடுமையாக முயற்சித்திருக்கிறார்கள்” என்கிறார்கள்.
அந்த ஏஎஸ்பி ஏன் இப்படி செய்தார்? இளம் வயதில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அவரது இயல்பு குணம் என்ன? சுபாவம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
–வேந்தன்