ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில்… இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு அதிமுகவின் எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தப் பகுதியில் இருந்து கணிசமானவர்கள் வெளியூர்களில் வசிப்பவர்களாக இருக்கிறார்கள் என்ற தகவலை அடுத்து தான் எடப்பாடி தரப்பினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரி பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதை வைத்துப் பார்க்கும்போது, ‘இரட்டை இலை இல்லாமலேயே கூட தேர்தலை எதிர்கொள்ள எடப்பாடி தயாராகிவிட்டார்’ என்கிறார்கள் இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்.
ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அந்த வீட்டிலிருந்து வாக்காளர் வெளியூரில் இருந்தால் அவரை பிப்ரவரி 27ஆம் தேதி வாக்களிக்க வரச் சொல்லுமாறு எடப்பாடி தரப்பினர் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் ஈரோட்டில் தங்களுக்காக வீடு பிடிக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதுவரை நகர செயலாளரான பெரியார் நகர் மனோகரன் வீட்டில் தங்கி தான் தேர்தல் வேலைகளை மேற்பார்வையிட தீர்மானித்துள்ளனர். இன்று ஈரோட்டுக்கு வரும் தங்கமணியும் வேலுமணியும் நகரச் செயலாளர் வீட்டில் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக எடப்பாடி தரப்பில் இதுதான் இன்றைய நிலவரம்.
திமுக- காங்கிரஸ்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு விட்டார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே மாவட்ட செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி அமைச்சர் நேருவுடன் இணைந்து கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.
வேட்பாளர் இளங்கோவன் சென்னையில் தலைவர்களை சந்தித்து விட்டு வருவதற்குள் அவரது மகன் சஞ்சய் சம்பத் நேற்று ஜனவரி 23 மாலை அப்பாவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.
ஜனவரி 23ஆம் தேதி மாலை ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பெரிய சேமூர் பகுதி அம்பேத்கர் நகர், வள்ளியம்மை வீதி, ராதாகிருஷ்ணன் வீதி, பெரிய வலசு ஆகிய இடங்களில் அமைச்சர் முத்துசாமி, புதிய திராவிட கழக நிறுவன தலைவர் கே. எஸ். ராஜ் கவுண்டர் உள்ளிட்டோரோடு இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் முதல் முறையாக பிரச்சாரத்தில் இறங்கி விட்டார்.
அண்ணனை பறிகொடுத்து விட்டு அப்பாவுக்காக தம்பி களத்தில் இறங்கி இருப்பது பகுதி மக்களிடம் உருக்கத்தை ஏற்படுத்தியது. இளங்கோவன் இன்று சென்னையில் இருந்து திரும்பி ஈரோட்டில் பிரச்சாரத்தை துவக்குகிறார் என்கிறார்கள் காங்கிரஸார்.
அமமுக
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரட்டை இலை யாருக்கும் கிடைக்காது என்ற நம்பிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சற்று தெம்போடுதான் இருக்கிறார்கள்.
நேற்று ஜனவரி 23ஆம் தேதி கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மண்டல பொறுப்பாளருமான உடுமலை சண்முகவேல் தலைமையில் ஈரோட்டில் அமுமுக மாவட்ட இளைஞர்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய பலரும் இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில் ஆர் கே நகரை போல டிடிவி தினகரனை களமிறங்கினால் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.
இதை பொதுச் செயலாளரிடம் சொல்வதாக கூறிய உடுமலை சண்முகவேல் குக்கர் சின்னத்தை விரைந்து மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் முன்னாள் மேயர் விசாலாட்சி தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பிரச்சாரத்திலும் இறங்கிவிட்டனர்.
பாஜக
ஈரோடு மாவட்ட பாஜக நிர்வாகிகள் இன்று வரை எந்த தேர்தல் பணியிலும் ஈடுபடவில்லை. ஜனவரி 23ஆம் தேதி திருச்சி வந்து அங்கிருந்து கரூர் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கரூரில் அண்ணன்மார் சாமிகளான பொன்னர் சங்கர் வழிபட்ட பல்லாண்டு காலம் பழமையான வாங்கல் கிராமத்தில் புது வங்காளம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார்.
கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அண்ணாமலையோடு இந்த விழாவில் கலந்து கொண்டார்.
இதன்பிறகு கரூரில் தன் வீட்டுக்குச் சென்ற அண்ணாமலை இன்று ஈரோடு வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அண்ணாமலை வருகை பற்றி தங்களுக்கு ஏதும் தகவல் இல்லை என்கிறார்கள் ஈரோடு பாஜகவினர்.
சில நாட்களுக்கு முன்பு காளிங்கராயன் தினத்துக்காக ஈரோடு வருவதாக இருந்த அண்ணாமலை தனது வருகையை ரத்து செய்திருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக பாஜக முடிவெடுப்பதில் யோசித்து வருகிறது. பாஜக ஒரு முடிவு எடுத்த பிறகுதான் அண்ணாமலை ஈரோட்டுக்கு வருவார் என்கிறார்கள் ஈரோடு பாஜகவினர்.
ஓபிஎஸ் தரப்பினர் பெரிதாக எந்த தேர்தல் வேலையையும் இன்னும் தொடங்கவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை இப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி மட்டும்தான் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு அடுத்தபடியாக அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் முழு வேகத்தோடு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
–வேந்தன்
ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன்: யாருக்கு ஆதரவு – சசிகலா
துணிவு படத்தை பார்த்து கொள்ளை: வங்கி கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் வாக்குமூலம்!