பாமக Vs சிறுத்தைகள்: தணியாத பதட்டம்!

அரசியல்

கடலூரில் விசிக, பாமக கொடியேற்றும் பிரச்சனையில் ஆர்டிஓ தலைமையில் நடந்த பீஸ் கமிட்டி கூட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புறக்கணித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், விசிக பாமக ஆகிய இரண்டு கட்சியனருக்கும் தங்களது கட்சி கொடி ஏற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனை சாதி கலவரமாக உருவெடுப்பதைத் தடுக்க, ஆர்டிஓ தலைமையில் நடைபெற்ற பீஸ் கமிட்டி கூட்டத்தில், விசிக கொடியை அகற்ற ஆர் டி ஒ உத்தரவிட்டார். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்று விசிக-வினர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினர்.

கடந்த நவம்பர் 28-ஆம் தேதி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சுப்பிரமணியபுரம் பேருந்து நிலையம் அருகில் விசிக கொடியேற்றியதை அகற்ற சொல்லி பாமக-வினர் போராட்டம் நடத்தினர்.

விசிக கொடி ஏற்றிய இடத்தில் பாமக கொடியை ஏற்ற அடிக்கல் நாட்டியதால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் உருவாகும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்து வருவதைப் பற்றி நமது மின்னம்பலம்.காம் பத்திரிகையில், டிசம்பர் 5ஆம் தேதி சிறுத்தைகள் Vs பாமக: பதற்றத்தில் கடலூர்-மெத்தனத்தில் மாவட்ட நிர்வாகம்! என்ற தலைப்பில் கொடிப்பிரச்சனையால் ஏற்படபோகும் விளைவுகளைப் பற்றி விரிவான செய்தியை வெளியிட்டிருந்தோம்.

மின்னம்பலம் செய்தியைப் பார்த்த முதல்வரின் தனிப்பிரிவு செயலர், தலைமை செயலர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் உடனடியாக விசாரித்து பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து ஆர்டிஓ அதியமான் கவியரசு தலைமையில் டிசம்பர் 8ஆம் தேதி பீஸ் கமிட்டி கூட்டம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா, நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், உள்ளாட்சித்துறை மாவட்ட துணை இயக்குநர், பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர், தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் குறிஞ்சிப்பாடி பிடிஓ, விசிக தரப்பில் துணை மேயர் தாமரைச் செல்வன் தலைமையில் 16 நபர்கள், பாமக தரப்பில் மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 16 நபர்களுடன் காலை 11.30 மணியளவில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டம் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 28.11.2022 அன்று கொடியேற்றியது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கோட்டாட்சியர் பேசும்போது,

“இந்த கூட்டத்திற்கு முன்பே வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விசிக கொடிக்கம்பத்தின் அளவில் எவ்வித மாற்றமும் செய்யாமல் ஏற்ற அறிவுறுத்தப்பட்டது.

அதன் பிறகு இரண்டு முறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், 28.11.2022 அன்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்று இரவு பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்று முதல் அக்கிராமத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், தினம்தோறும் 200 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது, ” கொடிக்கம்பம் சம்பந்தமாக ஆர்டிஓ மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளரிடம் விசாரித்து ரிப்போர்ட் கேட்கப்பட்டது.

அதில் ஆர்டிஓ கொடுத்த ரிப்போர்ட்டில், சுப்பிரமணியபுரம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் செல்வோரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளது. சாலை விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளதால், அங்கு நிறுத்தப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றலாம் என பரிந்துரை செய்துள்ளார்.

பொதுப்பணித்துறை பொறியாளர், சுப்பிரமணியபுரத்தில் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பத்தின் அடித்தளம் அதிவேக காற்று வீசும்போது தாங்கும் அளவிற்கு உறுதியற்ற தன்மையில் உள்ளது. தாங்கு கம்பிகள் பூமியில் உறுதியாக பதிக்கப்படாததால், இங்கு நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பம் பாதுகாப்பற்றது எனவும் ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.

மேலும் அரசியல் கட்சியினர் மற்றும் சங்கத்தினர் அனுமதியின்றி கொடிக்கம்பங்களை நிறுவுவதை சென்னை உயர்நீதிமன்றம் 2018 டிசம்பர் 3ஆம் தேதி அளித்த உத்தரவில் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் அடிக்கடி பேரிடரை எதிர்கொள்ளும் மாவட்டமாகும், மேலும் மேற்படி கொடிக்கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டு எவ்வித முன் அனுமதியின்றியும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமலிருக்க சுப்பிரமணியபுரம் கிராமத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் சம்பந்தப்பட்ட கட்சியினர் ஒரு வார காலத்திற்குள் தாமாகவே முன்வந்து அகற்றிடவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை மூலம் அகற்றப்படும் என்றும் கோட்டாட்சியர் அறிவித்தார்.

அப்போது கூட்டத்தில் பேசிய விசிக துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் முதலில் அகற்றுங்கள் அதன் பிறகு எங்கள் கொடிக்கம்பத்தை அகற்றுகிறோம் என்று கூறி விசிக நிர்வாகிகளுடன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

பாமகவினர் கோட்டாட்சியர் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு விசிக கொடியை அகற்றினால் நாங்கள் பாமக கொடியை ஏற்ற மாட்டோம் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியேறினார்கள்.

பீஸ் கமிட்டி கூட்டத்தைப் பற்றி பாமக தாமரைக் கண்ணனிடம் நாம் கேட்டபோது, விசிகவினர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறிவிட்டனர். விசிக கொடியை அகற்றினால் நாங்கள் எங்கள் கொடியை ஏற்ற மாட்டோம், ஆர்டிஓ உத்தரவை பத்து நாட்கள் பார்ப்போம். விசிக கொடியை அகற்றவில்லை என்றால் 11வது நாளில் பாமக கொடியை ஏற்றுவோம் என்றார்.

விசிக தாமரைச்செல்வனிடம் கேட்டபோது, விசிக கொடியை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாமகவினர் இருக்கிறார்கள். பாமகவினருக்கு ஆதரவாக அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

எங்கள் கொடிக்கம்பத்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஏற்றியுள்ளோம். அந்த கொடிக்கம்பத்தை பல காரணங்கள் சொல்லி ஆர்டிஓ அகற்ற சொல்கிறார்.

முதலில் கடலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்றுங்கள் அதன் பிறகு விசிக கொடியை அகற்றுகிறோம். அதனை மீறி எங்கள் கம்பத்தில் கை வைத்தால் மாவட்டமே ஸ்தம்பித்துவிடும் என்றார்.

மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசியபோது ”பாமக வினர் விசிக கொடியை அகற்றியாக வேண்டும் என போராடுகிறார்கள். அமைதி பேச்சு வார்த்தை நடத்தி விசிக கொடியை அகற்ற சொன்னால், அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். அதற்காக திமுக, அதிமுக, பாஜக கொடியை அகற்றவா முடியும். அப்படி தைரியமாக செய்ய எந்த அதிகாரிகள் இருக்கிறார்கள்?

இப்போது சுப்பிரமணியபுரத்தில் ஏற்றப்பட்ட விசிக கொடியை அகற்றினால் அனுமதி இல்லாத மற்ற கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்ற சொல்லி விடுதலை சிறுத்தைகள் போராட்டம் செய்வார்கள். திமுக, அதிமுக, பாமக கொடியை அகற்றினால் அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்வார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் மாவட்ட அதிகாரிகள் தலையில் கை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை ஊர் பிரச்சினைகளை எப்படி தீர்க்க போகிறோமோ என நம்மிடம் புலம்பினார்கள் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள்.

வணங்காமுடி

மாண்டஸ் பாதிப்பு: முதலமைச்சர் நேரில் ஆய்வு!

அதிமுகவோடு கூட்டணி இல்லை- திமுகவோடு சமரசம் இல்லை: அண்ணாமலையின் புது ரூட்!

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *