குற்றவாளிகளுடன் போலீஸ் கூட்டணி: சிறையில் இருக்கும் உண்மைகள்! மினி க்ரைம் தொடர் -9 

அரசியல்

வணங்காமுடி

யார் இந்த எண்ணூர் தனசேகரன்?

வெளியே குற்றங்களை செய்துவிட்டு அதற்கான தண்டனையாக சிறைக்கு சென்றால், சிறையில் இருந்தபடியே வெளியே தொடர் குற்றங்களுக்கான ஸ்கெட்ச் போட்டு, அறிவிக்கப்படாத அமைப்பைப் போன்றே  குற்ற நெட்வொர்க்கை நிறுவியிருக்கும் இந்த எண்ணூர் தனசேகரன் யார்?

வட சென்னையில் வளமாகவும் பலமாகவும் வாழ்ந்துவரும் தனசேகரன் பின்னணியைப் பற்றி விசாரித்தோம்.

நல்ல திறமையானவர், பட்டப்படிப்பு படித்தவர், காவல்துறையில் எஸ்.ஐ,யாக பணியாற்றவேண்டும் என்று தீவிரமாகப் படித்து அன்றாடம் உடற்பயிற்சி செய்து உடல் திறனை நன்றாக வைத்திருந்தவர்.  எஸ் ஐ தேர்விலும் கலந்து கொண்டவர். ஆனால் அந்த தனசேகரன் மீது மொத்தம் 25 வழக்குகள்.

அதில் ஒன்பது வழக்குகளில் சாட்சிகள் மாறியதாலும், சமாதானம் ஆனதாலும் விடுதலையாகிவிட்டார்.   மீதமுள்ள 16 வழக்குகளில் கஞ்சா வழக்கு 2, கொலை வழக்கு (302) 3, கொலை முயற்சி வழக்கு (307) 7, அடிதடி வழக்கு 506 (2) 4 ஆகிய வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

எஸ்.ஐ. தேர்வு எழுதியவர் மீது எப்படி இத்தனை வழக்குகள் வந்தன?

காவல்துறையே தனது கனவு என இருந்த தனசேகரனுக்கு ஒரு காதலி இருந்தார். அவரை எவனோ ஒருவன்  கிண்டல் செய்துவிட அந்த கோபத்தில் அவனை அரிவாளால் வெட்டிவிட்டார் தனசேகரன்.

அவனை வெட்டியதில், முதல் கொலை முயற்சி வழக்கு பெற்று சிறைக்குச் சென்று வெளியில் வந்தார். அவ்வளவுதான் தனசேகரனின் வாழ்க்கை மொத்தமாய் திசைமாறியது.  வெளியே வந்த தனசேகரனை ஏரியாவின் அடிதடிப் புள்ளிகள் எல்லாம் வந்து பார்த்தனர்.வணக்கம் வைத்தனர். தனசேகரனின் மவுசு கூடியது.

உன் உலகம் வேற என் உலகம் வேற என்ற திருச்சிற்றம்பலம் வசனம் போல…. போலீஸ் ஆகும் நோக்கத்தில் தீவிரமாக இருந்த தனசேகரனுக்கு… இந்த அடிதடி வெட்டுக்குத்து உலகம் பற்றி எதுவுமே தெரியாது.  ஆனால்  காவல் அதிகாரியாக நினைத்த தனசேகரனை காலம் ரவுடியாக்கியது.

அந்த நேரத்தில்தான் எண்ணூரில் தாதாவாக வலம்வந்த பெரியமுத்துவிடம் அடியாளாக சேர்ந்துவிட்டார் தனசேகரன்.  கொஞ்ச நாளிலேயே பெரியமுத்துவுக்கு நம்பிக்கையான கையாக மாறிப் போனார். பெரியமுத்துவின் ஒவ்வொரு ஆபரேஷனிலும் தனசேகரனின் பங்கு இருந்தது. அது  கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்தது.

பெரியமுத்துவின் வட்டத்துக்குள்ளேயே தனசேகரனுக்கு என்று ஒரு தனி வட்டம் உருவாக ஆரம்பித்தது. பொதுவாகவே ரவுடிகளின் உலகத்தில் இது நடப்பதுதான்.   ‘எத்தனை நாளுக்குதான் தனா அல்லக்கையாவே இருப்பே?  நீயும் ஒரு பெரிய கையா ஆவ வேணாமா?’ என்று சில நெருங்கிய குரல்கள் தனசேகரனை உசுப்பேற்றின.

இந்த நிலையில்தான்  தனசேகரன் தனது அசுர வளர்ச்சியால், குருவான பெரியமுத்துவிடமே உரசி பார்த்தார்.  ஒரே பகலில் பெரியமுத்துவும்,  தனசேகரனும் பயங்கர எதிரியாகிப் போனார்கள்.

’என்கிட்ட வளர்ந்த பய என்னையே  எதிர்த்து நிக்கிறானா?’ என்று கோபத்தின் உச்சிக்குப் போன பெரியமுத்து, நேற்று வரை தனது சீடனாக இருந்த தனசேகரனின் தலையை எடுக்க உத்தரவிட்டார். இதற்கான பொறுப்பை காளிமுத்து என்பவரிடம் கொடுத்தார் பெரியமுத்து.

பெரியமுத்துவின் வீட்டில் இன்றைக்கு என்ன குழம்பு என்பதைக் கூட கண்டுபிடித்துவிட ஆள் வைத்திருந்த தனசேகரனால்… தன்னைக் கொலை செய்ய காளிமுத்துவிடம் பெரியமுத்து பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் என்பதை ஸ்மெல் செய்துவிட்டார்.

இந்த தகவல் தனசேகரன் கவனத்திற்கு சென்றதும், ‘நீ எனக்கு ஸ்கெட்ச் போடுறதுக்கு முன்னாடி நான் உனக்கு போடுறேன் பக்கா ஸ்கெட்ச்’ என்று சொல்லி… தன்னைப் போட ரெடியான காளிமுத்துவையும், போடச் சொன்ன குருவான பெரியமுத்துவையும் போட்டுத்தள்ளிவிட்டு  சிறைக்குச் சென்றார் தனசேகரன்.’ இந்த முறை வெளியே வந்ததும் எண்ணூர் தனசேகரன் தான் வடசென்னையின் பாஸ்.

Cuddalore jailer home set fire Realities 9

எண்ணூர் துறைமுகத்தில் ஒப்பந்தகாரர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளைக் கட்டப்பஞ்சாயத்து செய்வது, கஞ்சா வியாபாரம், செம்மரக்கடத்தல் செய்பவர்களை மிரட்டிக் குறைந்த விலைக்கு வாங்கி அதிகமான விலைக்கு கை மாற்றி விடுவது, ட்ரான்ஸ்போர்ட், துறைமுகம் மற்றும் பவர் பிளாண்டில்  காண்ட்ராக்ட் எடுத்தவர்களிடம் மாதம் மாதம் அவர்களுக்கு வரும் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் வசூலிப்பது,

ஹவாலா பணம் போவதைக் கண்டுபிடித்து அதை அடிப்பது என எண்ண முடியாத அளவுக்கு கரன்சி கொட்டியது தன சேகரனிடம். தனம் என்றால் செல்வம், சேகரன் என்றால்  சூடியிருப்பவன் என்று அர்த்தப்படுத்தி  தன் பெயருக்கு ஏற்றபடி வடசென்னையின் இரண்டாம் பிசினஸ்கள் எல்லாவற்றிலும் கொடிகட்டிப் பறந்தார் தனசேகரன்.

கமல் எப்படி சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்வார் என்பார்களோ அதேபோல தனசேகரன் இந்த குற்றப் பின்னணி மூலம் சம்பாதித்ததை இந்த ஃபீல்டிலேயே முதலீடு செய்து தனியொரு ஆளாக குற்றம் செய்யாமல் இதை ஒரு நிறுவனமயப்படுத்தும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் என்கிறார்கள் போலீஸார்.

அதென்ன நிறுவனமயப்படுத்தப்பட்ட குற்றம்?

(சிறைக் கதவு திறக்கும்)

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 1

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 2

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 3

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 4

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 5

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 6

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 7

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 8

+1
0
+1
0
+1
1
+1
6
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *