வணங்காமுடி
சிறையில் போட்ட ஸ்கெட்ச்!
கடலூர் மத்திய சிறை தலைமை வார்டன் செந்தில்குமாருக்கும் கைதியாக இருந்த ரவுடி எண்ணூர் தனசேகரனுக்கும் சிறை உதவி அலுவலர் மணிகண்டனைப் பழி வாங்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.
சிறைக்குள் செல்போன்களை வைத்திருந்த காரணத்தால் தனசேகரன் மீது வழக்குகள், அதை அனுமதித்த காரணத்துக்காக தலைமை வார்டன் செந்தில்குமாருக்கு மெமோ … இதுதான் சிறை உதவி அலுவலர் மணிகண்டன் செய்த தவறு.
இருவருக்கும் பொது எதிரியாகிப் போன சிறை உதவி அலுவலர் மணிகண்டனை எப்படி பழிவாங்குவது என கைதியும், தலைமை வார்டனும் சேர்ந்து சதி ஆலோசனை செய்தார்கள்.
இந்த சதியாலோசனையில் தனசேகரனுடன் சிறையில் இருந்த திருநெல்வேலியை சேர்ந்த ரவுடி நாகராஜனையும் இணைத்துக் கொண்டனர்.
கோபத்தின் உச்சியிலிருந்த தனசேகரன், ’என்னை அசிங்கப்படுத்திய சிறை உதவி அலுவலர் மணிகண்டனையும், வார்டன் விநாயகத்தையும் முடிச்சுடுங்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அவனுங்க உடம்பே கிடைக்கக் கூடாது.
அள்ளிக்கிட்டுதான் போகணும். இந்த ப்ளானை பக்கவா முடிப்போம். முடிச்சதும் சூப்பிரண்ட் செந்திலுக்கும் ப்ளான் போட்டுத் தர்றேன்” என்றிருக்கிறார் ரவுடி தனசேகரன்.
அப்போது பக்கத்தில் இருந்த தலைமை வார்டன் செந்தில்குமார், “ஆமா… என்னையும் அசிங்கப்படுத்திட்டானுங்க. எனக்கு இப்ப மெமோ கொடுத்திருக்கானுங்க.
மணிகண்டனை இப்படியே விட்டா என்னை சஸ்பெண்ட் பண்ற அளவுக்கு போயிடுவான்’ என்றிருக்கிறார்.
அப்போதுதான் நாகராஜன், ‘அண்ணே… நான் ஆகஸ்டு 19 ஆம் தேதி பெயில்ல வெளிய போறேன். என்ன செய்யணும்னு என்கிட்ட சொல்லுங்க. நான் எல்லாத்தையும் ரெடி பண்றேன்’ என்று வாக்குறுதி கொடுக்க, தனது ஜெயில்மேட் நாகராஜனுக்கு சில அசைன்மென்ட்டுகளை கொடுக்கிறார் தனசேகரன்.
’எனக்கு நீ போன் பண்ண வேண்டாம். நம்ம வார்டன் செந்தில்குமார் சார்க்கு போன் பண்ணி அப்பப்ப பேசு. அவர் என்கிட்ட சொல்லுவாரு. நான் சொல்ற விசயங்களையும் அவரே உனக்கு போன் பண்ணி சொல்லுவாரு.
என்னோட வக்கீல்கள் தினேஷ், அரவிந்தன், அப்புறம் என் தம்பி மதி மூணு பேரையும் பாத்து இப்ப நான் சொன்னதெல்லாம் சொல்லு. மணிகண்டனை போட்டுத் தள்ளும் விசயத்தை அவங்க பாத்துப்பாங்க’ என்று கட்டளைகளை இட்டுள்ளார் தனசேகரன்.

இதையடுத்து வெளியே சென்ற நாகராஜன் கொடுத்த தகவல்படி தனசேகரனின் வழக்கறிஞர்கள் தினேஷ், அரவிந்தன் இருவரும் திருச்சியில் உள்ள தனசேகரனின் தம்பி மதி மற்றும் படையப்பா என்கிற மௌலீஸ்வரன் ஆகியோரை சந்தித்துள்ளனர்.
அதற்கு மதி, ‘இப்ப நாங்க நேரடியா வர முடியாது. சென்னையிலேர்ந்து மனோ (மணவாளன்)னு ஒருத்தரும் அவரோட இன்னொருத்தரும் வருவாங்க, மேட்டரை ஈசியா முடிச்சிடுவாங்க. அவங்ககிட்ட இடத்தைக் காட்டினா போதும்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆகஸ்டு 19 ஆம் தேதி நாகராஜன் ஜாமீனில் வெளியே செல்கிறார். அவர் சென்ற ஒரு வாரத்துக்குள் அதாவது ஆகஸ்டு 25 ஆம் தேதி இந்த திட்டங்களை எல்லாம் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வழக்கறிஞர் தினேஷ், அரவிந்தன், அறிவழகன் மூவரும் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் தனசேகரனை தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார்கள்.
அவர்களில் அரவிந்தனிடம் மட்டும் தனசேகரன் சிறை விதிகளை எல்லாம் மீறி 90 நிமிடங்கள் அதாவது ஒன்றரை மணி நேரம் தீவிரமாக டிஸ்கஸ் செய்திருக்கிறார்.
இரண்டு நாள் இடைவெளிவிட்டு ஆகஸ்டு 27 ஆம் தேதி தினேஷ், அரவிந்தன் ஆகியோர் மீண்டும் கடலூர் சிறைக்கு சென்று தனசேகரனை சந்தித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அன்று இரவுதான் திருச்சி மதி குறிப்பிட்ட சென்னை மனோவும், அவரது நண்பர்கள் இருவரும் இரண்டு லிட்டர் பாட்டில்கள் மூன்றில் பெட்ரோலையும், கெரோசினையும் கலந்து எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.
பெட்ரோலும் கெரோசின் எனப்படும் மண்ணெண்ணெயும் கலந்து ஊற்றி பற்ற வைத்தால் அந்தத் தீ சாதாரணமாக அணைக்க முடியாத அளவுக்கு நின்று எரியும் என்பது அவர்களின் அனுபவப் பாடம்.

கடலூர் மத்திய சிறைச் சாலை அமைந்திருக்கும் வண்டிப்பாளையம் பகுதிக்கு சென்னை டீம் வந்துவிட்டது.
சரியாக அந்த நேரத்தில் தனசேகரனின் வழக்கறிஞர் தினேஷ் தலைமை வார்டன் செந்தில்குமாருக்கு போன் செய்து, ‘மனோ அப்படிங்குறவர் உங்ககிட்ட பேசுவார். வண்டிப்பாளையம் ஏரியாவுலதான் இருக்காங்க. அவங்களை பிக்கப் பண்ணிக்கங்க. நல்லபடியா முடிங்க சார்’ என்று கூறியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் சிறை தலைமை வார்டன் செந்தில்குமாருக்கு மனோவிடம் இருந்து வாட்ஸ் அப் கால் வருகிறது.
“நான் மனோ பேசுறேன். வண்டிபாளையத்துல அங்க நிக்கிறேன்’ என்று கூறுகிறார். அப்போது வார்டன் செந்தில்குமாரிடம் பைக் இல்லாததால், பக்கத்திலிருந்த வார்டன் கண்ணன் என்பவர் பைக்கை வாங்கிக்கொண்டு வண்டிபாளையம் சென்று மனோ கார்த்திக், இளந்தமிழன் உட்பட 4 பேரை அழைத்துகொண்டு சிறை காவலர்கள் குடியிருப்பை நோக்கி செல்கிறார் செந்தில்குமார்.
முதலில் விநாயகம் வார்டன் வீட்டுக்குப் போவதற்குதான் ஆலோசனைகள் செய்கிறார்கள். அதன் பிறகு, ’சப் ஜெயிலர் மணிகண்டன் தான் இதுக்கு முக்கிய காரணம்., அவனை குடும்பத்தோடு காலிசெஞ்சால்தான் மத்தவங்களுக்கு பயம் இருக்கும்’ என்று முடிவெடுத்து நேராக மணிகண்டன் வீட்டு வாசலுக்குப் போகிறார்கள்.
மணிகண்டன் மெடிக்கல் லீவில் கும்பகோணம் சென்றது வார்டன் செந்தில்குமாருக்குத் தெரியவில்லை. கணவன் வீட்டில் இல்லையென்பதால் வாசல் லைட்டை ஒரு தைரியத்துக்காக எரியவிட்டிருந்தார் அவரது மனைவி பவ்யா.
வீட்டு வாசலில் லைட் எரிந்துகொண்டிருந்ததால்… பக்கவாட்டமாகச் சென்று கிச்சன் ஜன்னல் வழியாக அறை முழுவதும் 4 ½ லிட்டர் ஊற்றி தீ வைத்துவிட்டுத் தப்பித்துள்ளார்கள்.
அன்று இரவு 2.15க்கு ஏதோ வாடையடிக்க திடுக்கிட்டு விழித்த மணிகண்டனின் மனைவி பவ்யா தீயைப் பார்த்து பதறியடித்து மாமனார், மாமியார், குழந்தைகளை எல்லாம் வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தார்.
அந்த பெண்ணின் நெஞ்சம், மணிகண்டனின் பெற்றோர், குழந்தைகள் எல்லாம் பயத்தில் துடித்துக் கொண்டிருந்த நிலையில்தான்… இந்த கொடூரத்தை அரங்கேற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்த தலைமை வார்டன் செந்தில்குமார் அதே குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
ஆனால் மறுநாள் காலைதான் செந்திலுக்கு அந்த ஏமாற்றத் தகவல் கிடைத்தது. சிறைக்கு சென்று தனசேகரனிடம் ’ரிஸ்க் எடுத்துத்தான் செஞ்சோம். ஆனா அவுங்க எல்லாரும் தப்பிச்சிட்டாங்க.
எனக்கே தெரியாம மணிகண்டன் லீவு எடுத்துட்டு ஊரை விட்டே போயிட்டான்’ என்று செந்தில் சொன்னதும் சிறையில் இருந்த தனசேகரன் டென்ஷனாகிவிட்டார். இதே தகவலை தனசேகரனின் வழக்கறிஞர் தினேஷிடமும் சொல்லியிருக்கிறார் செந்தில்குமார்.
இது அத்தனையும் போலீஸாரிடம் கடலூர் மத்திய சிறை தலைமை வார்டன் செந்தில்குமார் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்!
(சிறைக் கதவு திறக்கும்)
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 1
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 2
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 3
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 4
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 5