வணங்காமுடி
கைவிரித்த வார்டனின் கால் விரித்ததும்…
செப்டம்பர் 1 ஆம் தேதி கடலூர் மத்திய சிறையில் சிறைக் காவலராக இருக்கும் செந்தில்குமார் முதுநகர் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் அழைப்பின் பேரில் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.
ஏற்கனவே சிறை உதவி அலுவலர் மணிகண்டனிடம், ‘உங்கள் வீடு எரிப்பு தொடர்பாக யார் மீதாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? அப்படி இருந்தால் எங்களுக்கு அதைச் சொல்லுங்கள்’ என்று விசாரணை அதிகாரிகள் கேட்டிருந்தனர். அப்போது மணிகண்டன் ஐந்து பேரை எழுதிக் கொடுத்திருந்தார். அதில் இந்த சிறைக் காவலர் செந்தில்குமாரும் ஒருவர் என்பது விசாரணை டீமை வியர்க்க வைத்தது.
மணிகண்டனுக்கும் செந்தில்குமார் மீது சந்தேகம் இருக்கிறது. போன் கால் விசாரணையிலும் செந்தில் மீது சந்தேக நிழல் படிந்திருக்கிறது. இந்த இரு உறுதிப்பாடுகளுடன் தான் அவரை முதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தார்கள்.
செப்டம்பர் 1 ஆம் தேதி மத்திய சிறைக் காவலர் செந்தில்குமார் சீருடையோடு முதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.

‘சிறை உதவி அலுவலர் மணிகண்டன் வீடு எரிப்பு விவகாரத்துல ஜெயிலுக்குள்ளதான் ஸ்கெட்ச் போட்டிருப்பாங்கனு சந்தேகப்படுறோம். உங்களுக்கு ஏதாவது அதப் பத்தி தெரியுமா?’ என்று விசாரணை அதிகாரி மத்திய சிறை காவலரிடம் கேட்டிருக்கிறார். ’அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாதுங்க’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார் செந்தில் குமார்.
டிஎஸ்பி கரிகால் அதற்குள் செந்தில்குமாரின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்தார். கடலூர் மத்திய சிறை வார்டனான செந்தில்குமாரின் மனைவி பிரேமா ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் செந்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளைச் சிறையில்தான் பணிபுரிந்திருக்கிறார். அங்கே நடந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகுதான் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஆத்தூர் சிறையில் என்ன சம்பவம் என கேட்கிறீர்களா? செந்தில்குமார் ஆத்தூர் கிளைச் சிறை வார்டனாக இருந்தபோது ஜவஹர் என்ற கைதிக்கு அன்பின் மிகுதியால் சிக்கன் பிரியாணியும், சிக்கன் 65 யும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த கைதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் திடீரென சிறை அதிகாரிகள் சோதனைக்காக உள்ளே புகுந்துள்ளனர்.
ஜவஹர் சிக்கன் பிரியாணியையும், லெக் பீசையும் மறைக்க முயல… வாசனையே அதிகாரிகளிடம் காட்டிக் கொடுத்துவிட்டது. ‘உனக்கு ஏதுய்யா பிரியாணி?’ என்று கேட்க, ‘வார்டன் கிட்ட என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பாரு. அதுக்கு உண்டான கப்பத்தை எங்க வீட்ல அவர்கிட்ட கொடுத்துடுவாங்க. எனக்கு மட்டுமா இங்க இருக்குற எல்லாருக்கும் இப்படித்தான்’ என்று பீஸ் பீஸாக உண்மைகளை எடுத்து வைத்துவிட்டார் அந்த கைதி ஜவஹர். அதற்கு தண்டனையாகத்தான் ஆத்தூர் கிளைச் சிறையில் இருந்து கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார் வார்டன் செந்தில்குமார்.
ஒஹோ…. ஆத்தூரிலேயே இவ்வளவு செய்திருக்கிறார் என்றால் கடலூரில் இன்னும் அதிகமாகத்தான் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த டிஎஸ்பி கரிகால், ‘அந்த வார்டன் செந்திலை மறுபடியும் வரச் சொல்லுங்கய்யா…’ என்றார். அதன் படியே இரண்டாவது முறை டி.எஸ்.பி. உத்தரவுப்படி கடலூர் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றிருக்கிறார் சிறை வார்டன் செந்தில்குமார்.
டிஎஸ்பியே விசாரித்துப் பார்த்தும் எதற்கும் அசைந்து கொடுக்காதவராய் நிமிர்ந்து நின்றார் வார்டன் செந்தில்குமார். ‘சார்… என் மேல சந்தேகப்படுறீங்களா? ஆத்தூர்ல நடந்தது வேற சார். நம்ம டிபார்ட்மென்ட் ஆளுங்களுக்கே நான் எப்படி சார் கெடுதல் செய்வேன்? எனக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லை சார்…’ என்று ஆணித்தரமாக பேசினார். தனக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கை விரித்தார்.

டி.எஸ்.பி.யே ஒரு கணம் குழம்பிவிட்டார். ‘வார்டன் இவ்வளவு விவரமா பேசுறாரே…. ஒரு வேளை இவருக்கு சம்பந்தம் இருக்காதோ… ‘ என்றெல்லாம் அவரது அனுமானங்கள் டைலாமோ ஆடிக் கொண்டிருந்தன.
அப்போது முதுநகர் ஸ்டேஷன் எஸ்,ஐ, மணிகண்டன் மெதுவாக டிஎஸ்பி அருகே சென்று, ‘சார்… எனக்கு ஒரு ரெண்டு நிமிசம் இவரை விசாரிக்க பர்மிஷன் தர்றீங்களா?’ என்று மெல்லக் கேட்டார். அதற்கு டி.எஸ்பி பெருங்குரலெடுத்து சிரித்தார்.
’என்னாய்யா ரெண்டு நிமிசத்துல நீ விசாரிக்கப் போறே….. அந்த ஆளு என்னமோ தனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி பில்டப் கொடுக்குறாப்ல… சரி சரி உன் பாணியில் விசாரி ?’ என்று அனுமதி கொடுத்தார்.

விசாரிக்க அனுமதி கொடுத்த டிஎஸ்பியும் என்னதான் நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தார்,
இதன் பிறகு கடலுர் சிறை வார்டன் செந்தில்குமாரை முதுநகர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஓர் அறைக்குக் கூட்டி சென்றார். அங்கு, தனது கால் விரிப்பு ஆபரேஷனை மிக சிறப்பாக செய்து முடித்தார்.
எஸ்.ஐ. மணிகண்டனை பெருமிதமாய் பார்த்தார் டி.எஸ்பி. கரிகால். ’ஒண்ணுமே தெரியாதுனு கை விரிச்சான். இப்ப எல்லாத்தையும் கொட்டுறானே…ப்ரமாதம் மேன் உன் என்கொயரி டேலன்ட்’
இந்த பாராட்டு இருக்கட்டும்.
கடலூர் மத்திய சிறை வார்டன் செந்தில்குமார் சொன்ன விஷயங்கள் டிஎஸ்பியை அதிர வைத்தன. அவரையே அதிர வைத்தன என்றால் கேட்கும் உங்களை இன்னும் அதிர வைக்கும்.
(சிறைக் கதவு திறக்கும்)
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 1
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 2
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 3