வணங்காமுடி
கடலூர் மத்திய சிறை துணை அலுவலர் மணிகண்டனின் வீட்டுக்குள் நள்ளிரவில் தீ வைக்கப்பட்ட சம்பவம் போலீஸ் துறைக்கு விடப்பட்ட நேரடி அச்சுறுத்தல்.
இதுகுறித்து கடலூர் டிஎஸ்பி டாக்டர் கரிகால் பாரி சங்கர், கடலூர் முதுநகர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ மணிகண்டன், புதுநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் தீவிர டிஸ்கஷன் செய்தனர்.
எல்லாருடைய கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அதாவது கடலூர் மத்திய சிறையில் கைதியாக இருக்கும் எண்ணூர் தனசேகரனின் வேலையாகத்தான் இருக்கும் என்பதுதான் அது.
சிறை என்பது வெளியுலகத் தொடர்புகள் ஏதுமின்றி தனிமைப்படுத்தப்பட்டு, அந்தத் தனிமையால் உளவியல் பாதிப்பு ஏற்பட்டு அதன் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளி திருந்த வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பு.
சிறை என்பது குற்றவியலை குலைக்கும் உளவியல், ஆனால் இப்போது தமிழக சிறைகள் குறிப்பாக கடலூர் சிறை எப்படி இருக்கிறது?
”சார் வெளியே 5ஜி புழக்கத்துக்கு வர்றதுக்கு முன்னாடியே அம்பானிகிட்ட பேசி ஜெயிலுக்குள்ள 5ஜி கொண்டுவந்துடுவாங்க போல சார்” ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம், சிறை உதவி அலுவலர் மணிகண்டன் சொன்ன வார்த்தைகள் இவை.

’என்ன மணிகண்டன் என்ன சொல்றீங்க?
‘ஆமா சார்… கடலூர் ஜெயில்ல தனசேகரன் அடைக்கப்பட்டிருக்கும் பிளாக்கில் கஞ்சாவும் செல்போனும் தாராளமா இருக்கு.
வெளியில இருக்குறவன் கூட ஒரு சிம் ரெண்டு சிம்தான் வச்சிருக்கான். ஆனா இங்க இருக்குறவங்ககிட்ட ஏழெட்டு சிம் கார்டு இருக்கு.
அதுவும் அந்த எண்ணூர் தனசேகரன் இருக்கானே… அவன் உள்ள பெரிய ராஜாங்கமே நடத்துறான் சார்” என்று தனது மேற்பார்வையில் கிடைத்த தகவல்களை எல்லாம் சிறை கண்காணிப்பாளர் செந்திலிடம் கொட்டினார் மணிகண்டன்.
எண்ணூர் தனசேகரனிடம் நம்பர் போன், வீடியோ கால் பேசும் ஸ்மார்ட் போன் என ஏகப்பட்ட போன்கள் இருக்கின்றன.
நம்பர் போனை இடுப்பிலேயே செருகி வைத்திருப்பான். யாராவது போலீஸ் நடமாட்டம் இருந்தால் சட்டென இடுப்பில் இருந்து ஜட்டிக்குள் இறங்கிவிடும் அந்த நம்பர் போன்.
ஸ்மார்ட் போன்களை ஜெயில் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தடியில் பாலிதீன் பைக்குள் போட்டு பத்திரமாக புதைத்து வைத்திருக்கிறான். மாலை ஆனவுடன் அந்த பாலிதின் பாக்கெட் தனசேகரனுக்கு வந்துவிடும்.
சிறைக்குள் இருந்து வீடியோ கால் போட்டு தன் மனைவி உள்ளிட்ட பலரிடமும் நேருக்கு நேர் பேசி வந்திருக்கிறான். நான் நேருக்கு நேராக கேட்டும் என்னையே எதிர்த்து பேசுறான்” என்பவைதான் சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் உதவி சிறை அலுவலர் மணிகண்டன் கூறிய விஷயங்கள்.
‘அரசல் புரசலா இருக்குனு தெரியும், இவ்வளவு டீடெயிலா? என்று ஆச்சரியப்பட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி தனசேகரன் இருக்கும் பிளாக்கில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்.
நேராக தனசேகரனை குறிவைத்தார் செந்தில்குமார். அப்போது இடுப்பில் இருந்த நம்பர் போன் சிக்கியது. அடுத்தடுத்த விசாரணையில் சிறை வளாகத்தில் இருக்கும் மரத்தடியில் தோண்டப்பட்டது.
அங்கே பாலிதீன் கவரில் போட்டு பத்திரமாக புதைத்து வைக்கப்பட்டிருந்தது ஸ்மார்ட் போனும் சில சிம் கார்டுகளும். அனைத்தையும் அள்ளிக் கொண்டு போய்விட்டார் கண்காணிப்பாளர் செந்தில்குமார்.
இதையெல்லாம் விவாதித்த போலீஸ் அதிகாரிகள் மணிகண்டன் வீட்டில் தீ வீசியது தனசேகரனின் வேலையாகத்தான் இருக்கும் என்ற அனுமானத்துக்கு வந்தனர்.
கடவுளே வந்தாலும் போலீசுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்தால்தான் கணக்கில் கொள்வார்கள். அதனால் கள விசாரணையில் இறங்கினார்கள்.
சிறைக் காவலர் குடியிருப்பில் மணிகண்டன் வீட்டுக்கு அருகே இருப்பவர்களிடம் விசாரித்தனர் போலீஸார். சம்பவம் நடந்த அந்த முன்னிரவு குடியிருப்புக்கு தொடர்பில்லாத புதிய முகங்கள் மூன்று பேர் இந்த பக்கமாகத்தான் வேகமாகப் போனார்கள் அக்கம் பக்கத்தினர் ஒரு திசையைக் காட்டினார்கள். அந்தத் திசையில்தான் தலைமை வார்டன் செந்தில்குமார் குடியிருக்கும் வீடு இருக்கிறது.
இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே சிறை உதவி அலுவலர் மணிகண்டனை அழைத்த விசாரணை அதிகாரிகள், “மணிகண்டன்… இந்த சம்பவத்துல உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
சிறைக்குள் தான் நடத்திய அதிரடிகளுக்கு எதிராக அவ்வப்போது வேலை பார்த்த ஐந்து சிறை ஊழியர்களின் பெயரை செல்போன்களோடு எழுதிக் கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.
தனசேகரன் மீது சந்தேகப்பட்டாலும் உறுதிப்படுத்துவது எவ்வாறு? தலையைப் பிய்த்துக் கொண்டனர் போலீஸார். சிசிடிவி ஃபுட்டேஜ்களும் கை கொடுக்கவில்லை. அதன் பிறகுதான் தம் கால் ட்ரீட்மெண்ட்டை ஆரம்பித்தனர்.
தம் கால் ட்ரீட்மென்ட்?
(சிறைக் கதவு திறக்கும்)
குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 1