குற்றவாளிகளுடன் போலீஸ் கூட்டணி: சிறைக்குள் இருக்கும் உண்மைகள்! க்ரைம் மினி தொடர் 10

அரசியல்

வணங்காமுடி

தனசேகரனின் இரட்டை இன்வெஸ்ட்மென்ட்!

’நான் தனி மனுசன் இல்ல… எனக்குப் பின்னாடி பெரிய கூட்டமே இருக்கு’  

இது சினிமாக்களில் ஹீரோக்களும்,  தன் முன்னால் பெரிய கூட்டம் இல்லாத நிலையிலும் மேடைகளில் அரசியல்வாதிகளும் சொல்லும் அரதப் பழசான வசனம்தான்.

ஆனால்,  குற்ற வழக்குகளை சுமந்து நிற்கும் அதிரடி ஆசாமி எண்ணூர் தனசேகரனுக்கு இந்த வாசகம் சரியாகப் பொருந்துகிறது. ஆம், தனசேகரன் என்ற குற்ற ஆசாமி தனி நபரல்ல, அவருக்குப் பின்னே ஒரு கூட்டமே இருக்கிறது. அந்த கூட்டத்துக்குள் சில போலீஸ்காரர்களும், போலீஸ் அதிகாரிகளுமே இருக்கிறார்கள்.

தனசேகரனுக்கு மாத வருமானமே குறைந்த பட்சம் ஒன்றரை கோடி ரூபாயைத் தாண்டும். அதில் தனக்கு பக்கபலமாக இருக்கும் மதுரை மோகன்ராம், எண்ணூர் ரஞ்சித்,  கன்னியாபுரம் அம்பேத், காக்காத் தோப்பு பாலாஜி போன்றவர்களுக்கென குறிப்பிட்ட தொகையை செலவு செய்கிறார் தனசேகரன்.

அதனால்தான்,  தனசேகரன் சிறையில் இருந்தபோதும் தனக்கு நம்பகமான கைகள் மூலம் உள்ளிருந்து ஸ்கெட்ச் போட்டு அதை வெளியே நிறைவேற்றி வருகிறார்.  

ஆட்களுக்குச் சம்பளம், போலீஸ் ஸ்டேஷன் மாமூல் தனக்கு நம்பிக்கையான போலீஸ் அதிகாரிகளுக்குக் கேட்கும்போதெல்லாம் அள்ளிக்கொடுப்பது, வழக்கறிஞர்களுக்குச் சம்பளம், சில இளைஞர்களை வழக்கறிஞராகப் படிக்க வைப்பது என்று பெரிய நெட்வொர்க்காகவே வளர்த்து வைத்துள்ளார் தனசேகரன்.

தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திரா கர்நாடகா என தென்னிந்திய மாநிலங்களில் இருக்கும் முக்கிய ரவுடிகளோடு தொடர்புகொண்டு தென்னிந்திய ரவுடியாக திகழ்கிறார் தனசேகரன்.  இந்த மூன்று ஸ்டேட்டுகளில் எந்த சிறையிலும் தனசேகரனுக்கு தொடர்பும் செல்வாக்கும் உண்டு.

எப்படி உருவானது இந்த நெட்வொர்க் என்று தனசேகரனுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால், ‘எல்லாமே அண்ணனோட அப்ரோச் தான் சார்’ என்கிறார்கள்.
‘அண்ணன் ஒரு ஜெயிலுக்குப் போனார்னா அங்க இருக்கிற முக்கியமான அக்யூஸ்டுகள் யார்னு ஒரே நாள்ல விசாரிச்சு தெரிஞ்சுக்குவாரு.

இப்ப சேலம் மத்தியச் சிறைக்கு போறார்னு வச்சிக்கங்களேன்  அங்குள்ள முக்கியமான குற்றவாளிகளை  போய் பார்த்து அறிமுகப்படுத்திப்பாரு. அவங்க என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் ஜெயில்லேர்ந்து அவங்களால சில விசயங்களை செய்ய முடியாம இருப்பாங்க.

அந்த விசயங்களை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு. வீட்டுக்கு பணம் கொடுத்து விடுறது, தான் வச்சிருக்கிற வக்கீல்கள் மூலமா பெயில் போடுறது, அதுக்கு பணம் செலவு பண்றதுனு எல்லாமே அண்ணன் பண்ணுவாரு.

யார்னா இவன்,  முன்ன பின்ன தெரியாம இவ்வளவு ஹெல்ப் பண்றான் என அவங்க தனசேகரன் அண்ணனை பாத்து ஆச்சரியப்படுவாங்க. ஆனா தனசேகரன் அண்ணனைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் இன்வெஸ்ட்மென்ட்.

Cuddalore jailer home set fire Realities 10


அதாவது இப்படி தன் மூலமா உதவி பெறும் ரவுடிகளின் தொடர்பு எண்களை வாங்கிக் கொள்வார் தனசேகரன். அவங்க வெளிய போனதும் அண்ணனுக்காக எதை வேணும்னாலும் செய்வாங்க. அப்பதான் அவங்க மூலமா தன்னோட ஸ்கெட்ச்சை எல்லாம் போட்டு நிறைவேத்திப்பாரு தனா அண்ணன்” என்கிறார்கள்.

இதே இன்வெஸ்ட்மென்ட் டெக்னிக்கைதான் கடலூர் மத்திய சிறையிலும்  பயன்படுத்தியிருக்கிறார்  தனசேகரன். ஆமாம். உதவி ஜெயிலர் மணிகண்டனை குடும்பத்தோடு கொளுத்துவதற்காக  கடலூர் மத்தியச் சிறையில் கொலை வழக்கில் சிறையில் இருந்த திருநெல்வேலி நாகு என்ற நாகராஜனை பெயிலில் எடுத்துவிட்டார் தனசேகரன்.

நாகராஜன் வெளியில் சென்றதும் தனது கூட்டாளிகளிடம், ’நீங்களே என்னை வந்து பார்க்கலை, எனக்கு உதவி செய்யலை.  ஆனால் அண்ணன் எண்ணூர் தனசேகரன் எனக்கு நிறைய உதவிகள் செய்தாரு.

குடும்பத்துக்குப் பணம் உதவியும் கொடுத்தாரு. அவருக்கு காலமெல்லாம் சேவைசெய்ய கடமைபட்டிருக்கேன்’ என்றிருக்கிறார். இதுதான் தனசேகரன் வளர்த்தெடுத்திருக்கும் குற்ற நெட்வொர்க்.

தனசேகரனின் இந்த நெட்வொர்க்கில் குற்றவாளிகளான ரவுடிகள் மட்டுமில்லை… போலீஸ் காரர்களும் இருக்கிறார்கள்.  போலீஸ் துணையில்லாமல் தனசேகரனால் இப்படி ஒரு ரவுடி ராஜ்யத்தை நடத்தவே முடியாது.

சிறையில் இருக்கும்  தனசேகரன் கோர்ட்டுக்கு போகும்போது அவரோடு  எஸ்கார்டு போலீஸ் டூட்டி வாங்குவதற்கு போலீசாரிடையே பெரும் போட்டியே நடக்கும். காரணம் அவ்வளவு பணம் கிடைக்கும் தனசேகரனிடம் இருந்து.

தனசேகரன் எஸ்கார்டு சென்னை பார்டர் போனதும், எஸ்கார்டு போலீஸ் வேன் முன்பு தனசேகரன் ஆதரவாளர்களின் ஸ்பெஷல் ஜீப் சேர்ந்துகொள்ளும். அதற்கும் முன்பு நான்கு புல்லட்டுகள் போகும்.  அதேபோல் பின்னால் நான்கு புல்லட் போகும்.

எஸ்கார்டு போலீஸாருக்கு  தனசேகரன் அள்ளிக் கொடுப்பதால் கோர்ட்டு போகும் வழியிலேயே செல்போன், ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு, இடையில் நிறுத்தி நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பேச ஏற்பாடு என எல்லாம் செய்துகொடுப்பார்கள் போலீஸார். காரணம் தனசேகரன் ஒரு தங்க முட்டையிடும் வாத்து போலீஸாருக்கு.

Cuddalore jailer home set fire Realities 10 ennore dhanasekaran

எண்ணூர் தனசேகரனால் போலீஸ் முதல் போலீஸ் அதிகாரிகள் வரையில் வாழ்ந்து வருகிறார்கள். வளர்ந்து வருகிறார்கள்.  அவர்கள் ஒருமுறை தனசேகரனிடம் இருந்து தட்சணை பெற்றுவிட்டால் எங்கே மாறுதலாகிப் போனாலும் தனசேகரனுக்கும் அவர்களுக்குமான தொடர்பு நீடிக்கும்.

இப்படி ஒரு பக்கம் ரவுடிகள்,  இன்னொரு பக்கம் போலீஸார் என தனது ரவுடித் தன ரதத்துக்கு இரு வேறு குதிரைகளை பூட்டியிருக்கிறார் தனசேகரன்.

இந்த நெட்வொர்க் இருக்கும் வரை தனசேகரன்கள் ஆங்காங்கே உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள்.  

முற்றும்!

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 1

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 2

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 3

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 4

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 5

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 6

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 7

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 8

குற்றவாளிகளுடன் கூட்டணி: காவல்துறைக்குள் கயவாளிகள்! சிறையில் இருக்கும் உண்மைகள் – 9

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2

1 thought on “குற்றவாளிகளுடன் போலீஸ் கூட்டணி: சிறைக்குள் இருக்கும் உண்மைகள்! க்ரைம் மினி தொடர் 10

  1. வெட்டி அரசியல் செய்திகளுக்கு மத்தியில் இந்த தொடர் வந்தது ஒரு மாறுதல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *